வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் தாய், மகள் பலி
சிதம்பரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தாய், மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் அருகே உள்ள ஆண்டார்முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோதை(69). இவரது மகள் ஜெயா(40). இவர்கள் இருவரும் இன்று காலை வீட்டில் இருந்தனர். கடந்த சில தினங்களாக பெய்த மழையினால் இவர்களது ஓட்டு வீட்டின் சுவர் மழை நீரால் ஊறி இருந்தது. இந்நிலையில் திடீரென வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. இதில் அசோதையும் அவரது மகள் ஜெயாவும் படுகாயமடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு அருகில் உள்ள புதுச்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் உடனடியாக ஆண்டார்முள்ளிப்பள்ளம் கிராமத்திற்கு சென்று இடிந்த வீட்டினை பார்வையிட்டார். பின்னர் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி ஈமச்சடங்கு உதவித் தொகையை வழங்கினார்.


