நெல்லை மாவட்டத்தில் பருவமழை தற்போது வரை 254% அதிகம்- வானிலை ஆய்வு மையம்
வடகிழக்கு பருவமழை துவங்கியிருக்கக்கூடிய சூழ்நிலையில் முதல் சுற்று மழை மற்றும் வங்கக்கடல் மற்றும் அரபிக் கடலில் நிலவும் சுழற்சி குறித்து தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையம் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசி,ய அவர், “தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அநேக இடத்தில் பதிவாகியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் 4 இடங்களில் மிக கனமழை 17 இடத்தில் கன மழை பதிவாகி உள்ளது. வங்கக்கடல் பகுதியில் வருகிற 21ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்து 48 மணி நேரத்திற்குள் வலுபெற வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அடுத்த ஏழு தினங்களில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று முதல் 22ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் தமிழகத்தில் 23ஆம் தேதியிலிருந்து 25ஆம் தேதி வரை கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. 20 தேதி முதல் 25 ஆம் தேதி வரை வட கடலோர மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டம் மற்றும் உள் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருக்கும். 23ஆம் தேதியை பொறுத்தவரை வட கடலோர மாவட்டங்கள் சென்னைம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய பகுதிகளுக்கு மிக கனமழைக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகும் சுழற்சியை பொறுத்து மாற்றம் நிகழக் கூடும். வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் தற்போது வரை 14 cm மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இவை இயல்பை விட 58 சதவீதம் அதிகமாக பருவ மழை பதிவாகியுள்ளது. சென்னையில் இயல்பிலிருந்து 20% பதிவாகியுள்ளது. குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை இதுவரை 254 சதவீதம் இயல்பை விட அதிகமாக பதிவாகியுள்ளது” என்றார்.


