பணமோசடி வழக்கு- சசிகலாவின் உறவினர் கைது; அடுத்த நொடி நெஞ்சுவலி என கதறல்

 
கைது

மணிப்பூரில் பண மோசடி செய்த வழக்கில் சசிகலாவின் உறவினர் இளவரசியின் சம்மந்தி பாஸ்கர் மணிப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சசிகலாவின் உறவினர் இளவரசியின் சம்மந்தி பாஸ்கர் (எ) கட்டை பாஸ்கர் (58) என்பவர் சென்னை புழலில் ஜெ.கிளப் என்ற பெயரில் மனமகிழ் மன்றம் ஒன்றை நடத்தி வருகிறார். சென்னை அண்ணா நகரை சேர்ந்த பாஸ்கரின் மகளை சசிகலாவின் உறவினரான இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மணிப்பூரில் தொழில் செய்த போது பாஸ்கர் மணிப்பூரில் சுமார் 2.28கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக மணிப்பூர் மாநிலம் இம்பால் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்துள்ளனர். நீதிமன்ற அனுமதி பெற்று மணிப்பூர் மாநிலம் இம்பால் போலீசார் 4பேர் கொண்ட குழுவினர் பாஸ்கரை கைது செய்வதற்காக தமிழ்நாட்டிற்கு வந்து சென்னையில் முகாமிட்டுள்ளனர். 

பாஸ்கர் புழல் பகுதியில் நடத்தி வரும் கிளப்பில் இருப்பதை அறிந்த மணிப்பூர் போலீசார் அங்கு சென்று அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். மணிப்பூர் போலீசார் அனைவரும் சீருடை அணியாமல் இருந்ததால் பாஸ்கரின் மேலாளர் சந்தேகமடைந்து அவசர போலீஸ் 100க்கு போன் செய்துள்ளார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த புழல் போலீசார் நடத்திய விசாரணையில் மணிப்பூர் போலீஸ் எனவும் பாஸ்கரை கைது செய்ய வந்துள்ளதாக கூறியுள்ளனர். இதனையடுத்து பாஸ்கரையும், மணிப்பூர் போலீசாரையும் புழல் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். மணிப்பூர் மாநிலம் இம்பால் காவல் நிலைய போலீஸ் என்பதும் அவர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து கைது செய்வதற்கான வாரண்டுடன் வந்ததை புழல் போலீசார் உறுதி செய்துள்ளனர். அப்போது பாஸ்கருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து மணிப்பூர் போலீசார் பாஸ்கரை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். தொடர்ந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கைதிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டில் பலத்த பாதுகாப்புடன் பாஸ்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே செம்மர கடத்தல் வழக்குகளில் மத்திய வருவாய் புலனாய்வு துறை மற்றும் ஆந்திர போலீசாரால் ஏற்கனவே கட்டை பாஸ்கர் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சசிகலாவின் உறவினரான இளவரசியின் சம்மந்தியை மணிப்பூர் போலீசார் சென்னையில் வைத்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.