கூகுள் பே, போன் பே மூலம் நவீன முறையில் லஞ்ச வசூல்- ரெய்டில் சிக்கிய அதிகாரிகள்

 
கூகுள் பே, போன் பே மூலம் நவீன முறையில் லஞ்ச வசூல்- ரெய்டில் சிக்கிய அதிகாரிகள்

திருவண்ணாமலை வேட்டவலம் சாலையில் தனியார் அடுக்குமாடி கட்டிடத்தில் இணை சார் பதிவாளர்-2  அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வீடு, நிலம், வீட்டுமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களை இந்த அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இந்த அலுவலகத்தில் தினந்தோறும் சுமார் 100 க்கும் மேற்பட்ட பத்திர பதிவுகள் நடைபெற்று வரும் நிலையில் வரன்முறை படுத்தப்படாத மனைகளுக்கு அதிக லஞ்சம் பெற்றுக் கண்டு பத்திரப்பதிவு செய்வதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் இன்று லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி வேல்முருகன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சார்பதிவாளர் குமரகுரு வரன்முறை செய்யப்படாத மனைகளுக்கு லஞ்சம் பெற்றுக் கொண்டு பத்திரப்பதிவு செய்தது அம்பலமான நிலையில் கணக்கில் வராத சுமார் 50,000 பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 


தொடர்ந்து சார் பதிவாளர் மற்றும் அலுவலக ஊழியர்கள் அனைவரது செல்போனையும் சோதனை செய்ததில் ஜி பே மற்றும் போன் பே மூலமாக பல லட்சம் லஞ்சம் பெற்றது அம்பலமானது. பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியாற்றும் ஒவ்வொரு ஊழியரின் ஜி.பே மற்றும் போன் பே ஆகியவற்றை தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக இந்த டிஜிட்டல் இணையதள பண பரிவர்த்தனை மூலம் லட்சக்கணக்கான பணங்கள் கணக்கில் வராமல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும்,  பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியாற்றாமல் இடைத்தரகராக செயல்படும் குமார் என்ற நபர் அலுவலகத்தில் அமர்ந்து இருந்த நிலையில் அவரை விசாரித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது கைபேசியை வாங்கி சோதனை செய்யும் போது பல நபர்களுக்கு ஜி.பே மற்றும் போன் பே மூலம் பணப் பரிவர்த்தனை நடைபெற்றது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அனைவரின் செல்போன்களை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். திருவண்ணாமலையில் மனை வரன்முறை படுத்தப்படாத மனைகள் லஞ்சம் பெற்று அதிகமாக பதிவு செய்வதாக வந்த புகாரின் அடிப்படையில் இன்று இந்த திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வரும் இந்த சோதனையில் கணக்கில் வராத 50,000 ரூபாய் பணமும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் இதுவரை 6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட செல்போன்களிலிருந்து பல்வேறு தகவல்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் திரட்டி வருகின்றனர். இச்சம்பவம் திருவண்ணாமலை நகரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.