"யுஜிசி விதிகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுக"- 9 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

 
mkstalin

தமிழக சட்டப் பேரவையில், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு சமீபத்தில் வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதைப் போன்று டெல்லி, இமாச்சல் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் மற்றும் தெலங்கானா மாநில சட்டமன்றங்களிலும் நிறைவேற்றிட வேண்டுமென கோரி அம்மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

BJP promised to transform India, but we got only name change: Stalin

அக்கடித்தில், தமிழக சட்டப் பேரவையில் கடந்த ஜன.9-ம் தேதி அன்று பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டுமென்றும், இளங்கலை, முதுகலைப் பட்டப் படிப்புகளில் கற்கை முறைகளுக்கான குறைந்தபட்ச வரைவு நெறிமுறைகள்-2024 மற்றும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆசிரியர்கள், கல்விப் பணியாளர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வு குறித்து வெளியிட்ட வரைவு நெறிமுறைகள்-2025 ஆகிய இரண்டு வரைவு நெறிமுறைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென்றும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானம் போன்று டெல்லி, இமாச்சல் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் மற்றும் தெலங்கானா சட்டப் பேரவைகளிலும் நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்திட வேண்டும். பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுகளின் பங்கைக் கட்டுப்படுத்தும் வகையிலும், பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வுகளை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட நிர்வாக நடைமுறைகளைக் கட்டுப்படுத்தும் வகையிலும் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகள் குறித்து மாநில முதல்வர்களின் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்.

Chief Minister MK Stalin dares Prime Minister Modi to spell out projects he  has brought to Tamil Nadu - The South First

பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் இந்த வரைவு நெறிமுறைகளை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்தி ஏற்கெனவே தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களும் இதேபோன்ற நிலைப்பாட்டை எடுப்பது அவசியம் என தான் உறுதியாக நம்புகிறேன். தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய இந்தத் தீர்மானத்தைப் போன்று தங்களது மாநில சட்டமன்றங்களிலும் இதுதொடர்பாக தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டும் என்று டெல்லி, இமாச்சல் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் மற்றும் தெலங்கானா முதல்வர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் மாநில அரசுகளின் உரிமைகளைத் தெளிவாக மீறும் செயல். இது நமது பல்கலைக்கழகங்களின் சுயாட்சியில் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும். அதிகாரத்தை மையப்படுத்தி, நமது நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்துக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் மத்திய அரசின் இந்த முயற்சிகளுக்கு எதிராக நாம் ஒற்றுமையாக நிற்பது மிகவும் முக்கியம். எனவே, தனது இந்தக் கோரிக்கையை மேற்குறிப்பிட்ட மாநில முதல்வர்களும் பரிசீலித்து, தங்களது மாநில சட்டமன்றங்களில் இதற்கான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென்று அக்கடிதத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.