"டங்ஸ்டன் போராட்ட வழக்குகளை ரத்து செய்வது குறித்து பரிசீலனை செய்யப்படும்"- மு.க.ஸ்டாலின்
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்வது தொடர்பாக பரிசீலினை செய்யப்படும் என்று முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரியும், மேலூர் முல்லைப் பெரியாறு ஒரு போக பாசன விவசாயப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் மேலூர் பகுதிகளில் பொதுமக்கள், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழக்குகளை ரத்து செய்வது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்தார்.
முன்னதாக டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கனிமங்களை ஏலம் விடும் முறைக்கு மட்டுமே நாடாளுமன்றத்தில் அதிமுக ஆதரவு தெரிவித்ததாக கூறினார். மேலும் திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் எந்தவித எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை என்று தெரிவித்தார். அப்போது பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின், திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் மற்றும் தோழமைக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறினார். மேலும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை முன்பு போராட்டம் நடத்தியதாகவும் கூறினார்.