"இந்தியாவில் ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லை"- மு.க.ஸ்டாலின்
ஒரே மதம் - ஒரே மொழி - ஒரே உணவு - ஒரே பண்பாடு - ஒரே தேர்வு - ஒரே தேர்தல் - ஒரே வரி என்று ஒரே பாட்டை பாடிக்கொண்டு இருக்கிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாஜக அரசை விமர்சித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக பவளவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மாநிலங்களை ஒடுக்கி, ஒற்றை ஆட்சித்தன்மை கொண்டதாக இந்தியாவை மாற்றுவதற்கு ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தைக் கொண்டுவரப் பார்க்கிறது பா.ஜ.க. அரசு. ஒரே நாடு – ஒரே தேர்தல் சாத்தியமில்லாதது. இதைச் சொன்னால் - "1967 வரைக்கும் நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் ஒன்றாகத்தான் தேர்தல் நடந்தது" என்று சொல்கிறார்கள். அப்போது இந்திய நாட்டின் மக்கள்தொகை என்ன? இப்போது மக்கள்தொகை என்ன? அன்றைய இந்தியாவும் - இன்றைய இந்தியாவும் ஒன்றா? அன்றைய வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? இன்றைய வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
நான் ஆதாரத்தோடு சொல்கிறேன். 28 மாநிலங்கள் - 8 யூனியன் பிரதேசங்கள் இருக்கிறது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வேண்டும். இது சாத்தியமா? 1951-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இந்தியா முழுமைக்கும் போட்டியிட்ட மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 1,874. ஆனால், 2024 தேர்தலில் 8,360 பேர் போட்டியிட்டார்கள். அன்றைய தேர்தலும் இன்றைய தேர்தலும் ஒன்றா?
அதுமட்டுமல்ல, நாம் எழுப்பும் பல்வேறு கேள்விகளில் முக்கியமானது, இவர்களால் நாடாளுமன்றத்துக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடிந்ததா? நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலையே, ஏழு கட்டங்களாகத்தான் நடத்த முடிந்தது. நாடாளுமன்றத் தேர்தலையே ஒரே கட்டமாக நடத்த முடியாதவர்கள் - நாடாளுமன்றத் தேர்தலோடு, இந்தியாவில் இருக்கும் அனைத்துச் சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவோம் என்று சொல்வது - "கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர் - வானம் ஏறி வைகுண்டம் காட்டுவேன்" என்று சொல்வது போன்று இருக்கிறது. இப்போது காஷ்மீரில் தேர்தல் நடக்கிறது. 90 சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்துகிறார்கள். இந்த நிலையில் ஒரே தேர்தல் என்று சொல்வதற்கு வெட்கமாக இல்லையா?
ஒரே மதம் - ஒரே மொழி - ஒரே உணவு - ஒரே பண்பாடு - ஒரே தேர்வு - ஒரே தேர்தல் - ஒரே வரி என்று ஒரே பாட்டை பாடிக்கொண்டு இருக்கிறார்கள். நடைமுறை சாத்தியமற்ற – சிக்கல் நிறைந்த பிரச்சினை இது! மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்துக்கும் - மக்களாட்சித் தத்துவத்துக்கும் விரோதமானது. இதனால் என்ன நடக்கும்? பல மாநில அரசுகளின் பதவிக்காலம் குறையும்! மாநிலங்களில் குழப்பம் ஏற்படும். மக்களவையின் வரலாறு என்ன? நாடாளுமன்ற மக்களவைகள் முன்கூட்டியே கலைக்கப்பட்டு இருக்கிறது. இப்போது இருப்பதும், பெரும்பான்மை பலம் கொண்ட பா.ஜ.க. அரசு அல்ல. 272 உறுப்பினர்களைக் கொண்ட ஆளும் கட்சி அல்ல பா.ஜ.க. 240 உறுப்பினர்கள் கொண்டதுதான். அதனால், மிகவும் எச்சரிக்கையோடு பா.ஜ.க தலைமை செயல்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.