கூட்டணிக்குள் மோதல் வராதா என சிலர் பொய்களை பரப்பிவருகின்றனர்- மு.க.ஸ்டாலின்

 
mks

கூட்டணிக்குள் மோதல் வராதா, பகையை வளர்க்க முடியாதா என்ற வேதனையில் பொய்களை பரப்பி அற்பத்தனமான காரியங்களை செய்து தற்காலிகமாக சந்தோஷம் அடைந்து வருகின்றனர். அவர்களின் கனவு எப்போதும் பலிக்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக பவளவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலன், “எல்லோரும் சொன்னார்கள்… நம்முடைய கூட்டணி அமைந்த பிறகு, தமிழ்நாட்டில் நடந்த அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்றிருக்கிறோம் என்றால், நம்முடைய கூட்டணி கொள்கைக் கூட்டணி மட்டும் அல்ல; வெற்றிக் கூட்டணி! இன்னும் சொல்ல வேண்டும் என்றால், தமிழ்நாட்டில் நாம் அமைத்த கூட்டணியை பார்த்துதான் - அகில இந்திய அளவில் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கான இந்தியா கூட்டணியே அமைக்கப்பட்டது. சில கட்சிகள் உருவாக்கும் கூட்டணிகள், தேர்தல் நேரத்தில் உருவாகி, தேர்தல் முடிந்ததும் கலைந்துவிடும்! ஆனால் நம்முடைய கூட்டணி அப்படி அல்ல!

நாம் ஒற்றுமையாக இருப்பதை பார்த்து கொள்கை எதிரிகளுக்கு பொறாமையாக இருக்கிறது. இவர்களுக்குள் மோதல் வராதா? பகையை வளர்க்க முடியாதா? என்று வேதனையில் பொய்களைப் பரப்பி - அற்பத்தனமான காரியங்களைச் செய்து, தற்காலிகமாக சந்தோஷம் அடைந்து கொள்கிறார்கள். அவர்கள் கனவு எப்போதும் பலிக்காது. நாடாளுமன்ற - சட்டமன்ற வெற்றிக் கணக்கில் நம்முடைய அணி ஐக்கியமாகவில்லை. பாசிசத்தையும் - மதவாதத்தையும் தமிழ்நாட்டில் அனுமதிக்க கூடாது என்பதற்காக, ஐக்கியமாகி இருப்பவர்கள் நாம்!

Image

சென்னையில் நடைபெற்ற பவளவிழா பொதுக்கூட்டத்தில் நான் உரையாற்றியபோது, உறுதியோடு ஒரு விஷயத்தை சொன்னேன். “கழகத்தின் நூற்றாண்டுக்குள், அனைத்து அதிகாரமும் கொண்டவைகளாக மாநில அரசுகளை மாற்றும் அரசியலமைப்புச் சட்டதிருத்தம் கொண்டு வர, அனைத்து சட்ட முன்னெடுப்புகளையும் திராவிட முன்னேற்றக் கழகம் நிச்சயமாக, உறுதியாக செய்யும்!" என்று நான் அறிவித்தேன். அந்த பயணத்தில் நாம் ஒருங்கிணைந்து செல்ல வேண்டும்” என்றார்.