“டாஸ்மாக்கில் MRPக்கு மேல 1 ரூபா கூட வாங்க கூடாது”- அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை

 
ச்

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட (MRP) கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் எச்சரித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில்  செய்தியாளர்களைச் சந்தித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ், “டாஸ்மாக் கடைகளில் ஊழியர்கள் மின்சாரக் கட்டணம் அல்லது இதர கையாளுதல் செலவுகளைக் காரணம் காட்டி, மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாகப் பணம் வாங்குவதாகப் புகார்கள் வருகின்றன. இதைத் தடுக்க, கடைகளின் செயல்பாட்டு பில்களை மத்தியமயமாக்கி அரசே நேரடியாக நிர்வகிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் MRP விலையை விட கூடுதலாக ஒரு ரூபாய் கூட தரத் தேவையில்லை. மலைப் பிரதேசங்களில் நீதிமன்ற உத்தரவுப்படி தொடங்கப்பட்ட காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் ரூ.10 ஸ்டிக்கர் திட்டம், தற்போது மாநிலம் முழுவதும் 36 மாவட்டங்களில் வெற்றிகரமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மேலும் எளிமையாக்கவும், நீண்ட கால அடிப்படையில் செம்மைப்படுத்தவும் துறை ரீதியான ஆலோசனைகள் நடந்து வருகின்றன. தேர்தல் வாக்குறுதி மற்றும் அரசின் கொள்கை முடிவின்படி, முதற்கட்டமாக மூடத் திட்டமிடப்பட்ட 717 கடைகளில், இதுவரை 436 டாஸ்மாக் கடைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. கடைகளை மூடுவதோடு மட்டும் அரசு நின்றுவிடவில்லை. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில், அந்த கடைகளில் பணியாற்றிய 2,290 ஊழியர்களுக்கும் மாற்றுப் பணிகள் வழங்கப்பட்டு, அவர்களின் மாதச் சம்பளம் எவ்வித பிடித்தமுமின்றி முழுமையாக வழங்கப்பட்டு வருகிறது.

மதுக் கடைகளை கண்மூடித்தனமாக முழுமையாக உடனே மூடுவது மட்டுமே தீர்வாகாது. அப்படிச் செய்தால் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், அண்டை மாநிலங்களில் இருந்து கடத்துதல் போன்ற சட்டம்-ஒழுங்கு சிக்கல்கள் ஏற்படும். எனவே, படிப்படியாகவும் திட்டமிட்டபடியும் கடைகள் குறைக்கப்படும். சமீபத்தில் சூலூர் பகுதியில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரச் சம்பவத்தைக் கண்டனத்திற்குரியது. இக்குற்றத்தில் தொடர்புடைய இருவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 25 முதல் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது தூக்குத் தண்டனை பெற்றுத் தரும் வகையில் காவல்துறை மற்றும் சட்டத்துறை மூலம் நீதிமன்றத்தில் மிக வலுவான வாதங்கள் முன்வைக்கப்படும்" என உறுதியளித்தார்.