அண்ணாமலையின் அறிவுரை தேவையில்லை- ஆர்.பி.உதயகுமார்
கலைஞர் நூற்றாண்டு விழா நாணயத்தில் இந்தி உள்ளது என ஈபிஎஸ் கூறியது தேசவிரோதக் குற்றமா? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “எம்ஜிஆர் புகழை நிலை நிறுத்துவது பற்றி அண்ணாமலை அறிவுரை கூற தேவையில்லை, 32 மாவட்டங்களிலும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை நடத்தியவர் ஈபிஎஸ். திமுகவின் இரட்டை வேடத்தை நாணயம் வெளியீட்டு விழா வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.
மத்திய அமைச்சரின் பேச்சால் முதலமைச்சர் தூக்கத்தை தொலைத்துவிட்டதாக சொல்கிறார். நாணயத்தை வெளியிட நிதியமைச்சரை அழைத்திருந்தால் கூட பரவாயில்லை. ஆட்சியை தக்க வைக்கத்தான் மத்திய அமைச்சருக்கு அழைப்பா? உதயநிதியை துணை முதல்வராக அமர்த்துவதில் சிக்கல் இருக்கக்கூடாது என்பதற்கான ஏற்பாடுதான் இதுவா? அழைப்பிதழில் தெளிவாக மாநில அரசின் நிகழ்ச்சி என்று உள்ளது. நாணயத்தில் இந்தி உள்ளது என ஈபிஎஸ் கூறியது தேசவிரோதக் குற்றமா? நாணயத்தில் இந்தி இருக்கிறதே என்று எடப்பாடி பழனிசாமி கேட்ட கேள்வி தேசவிரோதக் குற்றமல்ல. நாணய வெளியீட்டுக்காக மாநில உரிமைகளை விட்டுக் கொடுத்த திமுக. முதலமைச்சரின் பேச்சு திமுக - பாஜக உறவை அம்பலப்படுத்தியுள்ளது. பாஜகவை திமுக எதிர்ப்பது போலியானது என்பது தெரியவந்துள்ளது. கருணாநிதியை வணங்கிவிட்டு அவரது கொள்கையை பாஜக எதிர்க்குமா? அப்படி அண்ணாமலை எதிர்த்தாலும் அதில் உண்மை இருக்குமா? தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் புரியாத தலைவராக அண்ணாமலை உள்ளார்” என்றார்.