"அதிமுகவுடன் கூட்டணி சேர எந்த கட்சியும் தயாராக இல்லை; அதிமுக தானாகவே அழிந்துவிடும்" - அமைச்சர் ரகுபதி
தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்பது ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கை என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் இன்று தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இலவச திருமண நிகழ்ச்சியித் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு மணமக்களுக்கு மாங்கல்யத்தை எடுத்து கொடுத்து 4 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார். மேலும் தமிழ்நாடு அரசு சார்பில் இருபதுக்கு மேற்பட்ட சீர்வரிசை பொருள்களை மணமக்களுக்கு வழங்கியும் அதேபோல் புதுக்கோட்டை மாவட்ட திமுக சார்பில் ஒவ்வொரு திருமண ஜோடிக்கும் பத்தாயிரம் ரூபாய் நிதியையும் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா உள்ளிட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருமணத்தை நடத்தி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்பது ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கை. வேறு வேலையில்லாததால் எடப்பாடி பழனிச்சாமி பகல் கனவு காண ஆரம்பித்துவிட்டார். திமுக கூட்டணியை அவர் உடைக்கவும் முடியாது, கொளுத்தவும் முடியாது, பிரிக்கவும் முடியாது, நசுக்கவும் முடியாது. இது அனைத்தும் அவர் சார்ந்திருக்க கூடிய கட்சிக்கு வேண்டுமென்றால் ஏற்படுமே தவிர தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினின் கட்சிக்கும் திமுக கூட்டணிக்கும் எந்த ஒரு சிறு பாதிப்பும் ஏற்பாடாது.

தமிழ்த்தாய் வாழ்த்து இருக்காது என்பது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் கருத்தாக இருக்கலாம். தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அத்தனை மக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனைவராலும் பாடப்பட்டு வருகிறது. அவர் இன்று அதில் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளார். ஆனால் ஒன்று மட்டும் உறுதி. தமிழ்நாடு, திராவிடம் இதை இரண்டையும் தமிழ் மண்ணில் இருந்து பிரிக்க முடியாத சொற்கள். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் திராவிடம் என்ற பெயரோடு தான் இருக்கிறது. இங்கு உள்ள கட்சிகள் திராவிடம் சார்ந்த கட்சிகள் தானே தவிர திராவிடம் சாராத கட்சிகள் இல்லை. யாரும் கட்சி ஆரம்பித்தால் கூட திராவிடம் சார்ந்து தான் கட்சியை ஆரம்பிக்கின்றனர். திராவிடம் என்பது தமிழ் மண்ணிலே ஊறிப்போன ஒன்று. அதை திராவிட கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் முன்னெடுத்துச் செல்லும். ஒரு இயக்கத்தை நாங்கள் அழிக்க வேண்டிய அவசியம் கிடையாது, அந்த இயக்கத்தின் தலைமை பலவீனமாக இருந்துவிட்டால் அந்த இயக்கம் தானாகவே அழிந்து விடும். இன்று எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை பலவீனமாக உள்ளது. அதனுடைய எடுத்துக்காட்டு தான் இந்த குழப்பம்.
அதிமுகவுடன் கூட்டணி சேர யாரும் தயாராக இல்லை, நம்பிக்கைக்குரிய இணையாக அதிமுகவை ஏற்றுக்கொள்ள எந்த கட்சியும் தயாராக இல்லை, அவரும் என்னென்னமோ எண்ணி வலைவீசி பார்க்கிறார் யாரும் அவர் பக்கம் செல்வதற்கு தயாராக இல்லை. அவரை திரும்பி கூட பார்க்கவில்லை அதுதான் உண்மை. சீமான் கற்பனையில் எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டு போகலாம். ஏதாவது குட்டி கலாட்டா செய்ய வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம். திருமாவளவனை பொறுத்தவரை திமுக கூட்டணியில் உறுதியோடு இருக்கிறார் தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் அரசு அமைவதில் அவர் உறுதியோடு இருக்கிறார்” என்று தெரிவித்தார்.


