அண்ணாமலையை போல விஜய்யும் புஸ்வானம் ஆவார்- அமைச்சர் ரகுபதி
விஜய் எம்ஜிஆர் பாணியை பின்பற்ற பார்க்கிறார், எல்லாரும் எம்ஜிஆர் ஆகி விட முடியாது, நிச்சயமாக அதில் அவர் தோல்வியைத்தான் சந்திப்பார் என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “எடப்பாடி பழனிச்சாமி சொல்லுகின்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் வீண் குற்றசாட்டுகளே தவிர வேறு ஒன்றும் இல்லை, அவர் மீது உள்ள குற்றச்சாட்டுகள் விசாரணைக்கு வரும்போது தெரியவரும். அவர் ஒன்றும் நிரபராதி அல்ல அவர் எந்த தவறும் செய்யாதவரும் கிடையாது, அவர் திமுக மீது பழி சுமத்துவதற்கு எந்த வித தகுதியும் உரிமையும் கிடையாது.திமுகவில் உள்ள அமைச்சர்களோ வேறு யாரோ எந்த தவறும் செய்யவில்லை. நிச்சயமாக எந்த சவாலையும் சந்திப்பதற்கு தயாராக இருக்கக்கூடியவர்கள் தான் திமுகவின் அமைச்சர்கள். நீதிமன்றத்திற்கு சென்று வெற்றி பெற்று வருவோமே தவிர நீதிமன்றத்தை சந்திக்க அஞ்சுபவர்கள் அல்ல, எடப்பாடி பழனிச்சாமி ஒருமுறை நீதிமன்றத்திற்கு சென்றால் தெரியும் எவ்வளவு சிரமப்பட போகிறார் என்று. அதை அவர் மனதில் வைத்துக்கொண்டு பேச வேண்டும்.
கரப்பான் பூச்சியை போன்று ஊர்ந்து சென்று பதவியை வாங்கிய எடப்பாடி பழனிச்சாமிக்கு காட்டமாக கேள்வி கேட்கின்ற யோகிதையோ அருகதையோ தகுதியோ கிடையாது. அவர் எப்படி பதவிக்கு வந்தார் என்பது தெரியும். வளைந்து நெளிந்து பாம்பு போல் ஊர்ந்து சென்று பதவி வாங்கியவர். அவர் தைரியசாலி அல்ல யாரையும் தைரியமாக எதிர்கொண்டு பதவி வாங்கவில்லை. கெஞ்சி தான் பதவி வாங்கினார். அவருக்கு சவால் விடுவதற்கான யோகிதை கிடையாது. ஒரேமேடையில் விவாதிக்க தயாராக இருக்கிறேன் என்று துணை முதலமைச்சர் கூறிய பிறகு அந்த சவாலை எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க வேண்டியது தானே.
பாதிக்கப்பட்ட நபர் மருத்துவரை தாக்கியுள்ளார், மருத்துவர் தாக்கப்படக் கூடாது என்பதுதான் சட்டம். மருத்துவர் கூறிய பாதுகாப்புக்கு இருக்கும் சட்டத்தை வைத்து நிச்சயமாக உரிய நடவடிக்கையை எடுத்திருக்கின்றோம். உரிய சட்டங்கள் மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 2021 ஆக இருக்கட்டும் 2024 நாடாளுமன்ற தேர்தலாக இருக்கட்டும் வலுவான கூட்டணி அமைப்பேன் என்று தான் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். ஆனால் அவரால் வலுவான கூட்டணி அமைக்க முடியவில்லை. அதுதான் அவருக்கு 2026ன் நிலைமையும், 2024 இல் முடியாதது 2026ல்லும் முடியாது. அதற்கான வாய்ப்பு நிச்சயம் கிடையாது. முதலமைச்சராக வரவேண்டும் என்ற கனவோடு பலர் வந்து கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சர் நாற்காலிக்கு பலர் வந்தாலும் இந்த நாற்காலியை விடாப்படியாக கெட்டியாக எங்களது முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிடித்துக் கொள்வார்,அதை யாராலும் தடுக்க முடியாது. அவரை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.
விஜய் எம்ஜிஆர் பாணியை பின்பற்ற பார்க்கிறார், எல்லாரும் எம்ஜிஆர் ஆகி விட முடியாது. நிச்சயமாக அதில் அவர் தோல்வியைத்தான் சந்திப்பார். ஏற்கனவே அண்ணாமலை ஊழல் பட்டியலை எல்லாம் கொடுத்து இருக்கிறார். புஸ்வானமாக போய்விட்டது. அதேபோல் திமுக மீதான விஜய்யின் குற்றச்சாட்டுகளும் சுபிசுத்துபோகுமே தவிர அவருக்கு எந்தவித பலனும் பயனும் கிடைக்கப்போவதில்லை” என்றார்.