சிறையில் செந்தில் பாலாஜிக்கு சிறப்பு வசதிகள் தரப்படவில்லை! சாதாரண கைதி போலவே இருந்தார்- அமைச்சர் ரகுபதி
சிறைதண்டனை முடித்து சிறைவாசிகள் விடுதலையாகும் போது தைரியம், தன்னம்பிக்கையுடன் வாழும் வகையில் சிறைச்சாலைகள் செயல்பட வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சிறைவாசிகளை பாதுகாப்பது மட்டுமின்றி அவர்களை சீர்திருத்தி மறுவாழ்வளித்து விடுதலைக்கு பின் சமூகத்தில் பயனுள்ள குடிமக்களாக இணைப்பதன் மூலம் அவர்கள் மீண்டும் குற்றம் இழைத்து சிறைப்படுத்தலை தடுக்கும் நோக்கத்தை செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக “சிறைகளில் கலை" என்ற புதிய திட்டத்தின் மூலம் சிறைவாசிகளின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், அவர்களை சீர்திருத்தம் செய்யும் புதிய திட்டமான ”சிறைகளில் கலை” என்ற திட்டத்தினை சிறைத்துறை அமைச்சர் ரகுபதி கடந்தாண்டு புழல் சிறையில் தொடங்கி வைத்தார். "சிறைகளில் கலை" என்ற திட்டத்தில் சிறைவாசிகளுக்கு ஆழ்நிலை தியானம், யோகா, இசை, நாடகம், இலக்கியம் மற்றும் விளையாட்டு போன்ற பயிற்சிகளை டெல்லி தேசிய சட்டப்பல்கலைக் கழகம் மற்றும் தனியார் அறக்கட்டளையும் இணைந்து வழங்கின. இதனையடுத்து புழல் தண்டனை சிறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறைகளில் கலை திட்டத்தில் பயிற்சி பெற்ற 40சிறைவாசிகளுக்கு சிறைத்துறை அமைச்சர் ரகுபதி சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
முன்னதாக நிகழ்ச்சியில் அமைச்சர் ரகுபதி பேசுகையில், சிறைவாசிகளின் நலனை பாதுகாக்கும் அரசு தற்போது பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருவதாக தெரிவித்தார். கைதி என யார் கூறினாலும் அதனை கண்டித்து சிறைவாசி என்றே அழைத்திட வேண்டும் என முதலமைச்சர் திருத்தியதாக கூறினார். சிறைவாசிகள் சிறையில் இருந்து வெளியே செல்லும் போது இந்த உலகத்தில் வாழ்ந்திட முடியும் என்ற தைரியம், தன்னம்பிக்கையோடு வெளியே செல்லும் வகையில் சிறைச்சாலைகள் அமைந்திட வேண்டும் என முதலமைச்சர் தொடர்ந்து அறிவுறுத்தி வருவதாகவும் அமைச்சர் ரகுபதி அப்போது தெரிவித்தார். தொடர்ந்து சிறையில் செந்தில் பாலாஜி இருந்த போது சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டதா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு... சிறையில் செந்தில் பாலாஜிக்கு சிறப்பு வசதிகள் தரப்படவில்லை, சாதாரண சிறை வாசி போல தான் இருந்தார்.. என அமைச்சர் ரகுபதி பதிலளித்தார்.