“5 மணிக்கே பிரச்சாரத்தை முடித்து விட்டோம்! திமுக வேட்பாளருக்கு வெற்றி உறுதி”- முத்துசாமி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் வி.சி சந்திரகுமார், அமைச்சர் முத்து சாமியுடன் இணைந்து தனது தேர்தல் பரப்புரையை கருங்கல்பாளையம் காந்தி சிலை முன்பாக நிறைவு செய்தார்.
ஈரோடு பவானி சாலையில் அக்ரஹாரம் பகுதியில் இறுதி கட்ட பரப்புரையை தொடங்கிய வி.சி.சந்திரகுமார், அக்ரஹாரத்தில் இருந்து நெரிக்கல்மேடு, வீரப்பன்சத்திரம், முனிசிபல் காலனி, இடையன்காட்டுவலசு, மேட்டூர் சாலை, சூரம்பட்டி நான்கு சாலை, காளை மாட்டு சிலை, மரப்பாலம், பன்னீர்செல்வம் பூங்கா உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக வாகன பிரசாரத்தில் ஈடுபட்டார். நிறைவாக கருங்கல்பாளையம் காந்தி சிலை முன்பாக அமைச்சர் முத்துசாமியுடன் இணைந்து, பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
பிரச்சாரத்தை நிறைவு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, “இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் தொகுதி முழுவதும் சென்று மக்களை சந்தித்து பிரச்சாரத்தை நிறைவு செய்திருக்கின்றோம். மக்கள் சிறப்பான ஆதரவு அளித்தார்கள். முதலமைச்சர் கொண்டு வந்துள்ள சிறப்பான திட்டங்களை மக்களே நினைவுபடுத்தி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்போம் என்று சொன்னார்கள். சிறு சிறு பிரச்சனைகள் இருப்பதையும் மக்கள் எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தார்கள். தேர்தல் முடிந்த பிறகு அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி அதற்கான தீர்வை நாங்கள் ஏற்படுத்துவோம். முதலமைச்சர் வாக்கு கேட்பதற்காக வாகனத்தில் சென்று வருவதை விட மக்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று முதலமைச்சர் சொல்லியிருந்தார்கள். அதன்படி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டோம்.
6 மணி வரை பிரச்சாரத்திற்கான நேரம் இருந்தாலும் 5 மணி வரை வாகன அனுமதி பெற்று இருந்தோம், விதிப்படி 5 மணிக்கு பிரச்சாரத்தை நிறைவு செய்துள்ளோம். பிரச்சாரத்திற்கு சென்ற இடங்களில் பெண்கள் மிகப் பெரும் ஆதரவை அளித்தார்கள். மிகப்பெரிய வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வி.சி சந்திரகுமாரை வாக்காளர்கள் வெற்றி பெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பிரச்சாரத்தில் இணைந்து பணியாற்றிய திமுக நிர்வாகிகளுக்கும் தோழமைக் கட்சியினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தொகுதிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் 140 கிலோ மீட்டர் அளவிற்கு நடந்து சென்று பிரச்சாரம் செய்திருக்கின்றோம். மக்களை நெருக்கமாக சந்திக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாட்டை செய்திருந்தோம். தோழமைக் கட்சிகள் எங்களோடு இணைந்து பிரச்சாரத்திற்கு வந்தார்கள். அவர்களுக்கும் நன்றி மக்கள் அளித்த கோரிக்கைகள் அனைத்தும் தேர்தல் முடிந்த பிறகு முழுமையாக நிறைவேற்றி தரப்படும் என்ற உத்தரவாதத்தையும் அளிக்கிறோம். மக்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு அளித்தார்கள். வாக்கு கேட்க வருகிறோம் என்ற உணர்வோடு பார்க்காமல் அவர்களில் ஒருவராக எங்களை அழைத்ததும் வரவேற்பு அளித்ததும் மகிழ்வாக இருந்தது. திமுகவிற்கு தான் வாக்களிக்க வேண்டும் என்ற உணர்வோடு மக்கள் இருந்தனர். அந்த உணர்வோடு எங்களை வரவேற்றார்கள்” என்றார்.