“ரூ.1,000 பிச்சை காசா? உழைப்பவர்களுக்கு தான் அந்த காசின் அருமை தெரியும்”- எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
மகளிர் உரிமைத் தொகையை பிச்சைக்காசு என்று கூறுகிறார் பாமக தலைவர் அன்புமணி. உழைப்பவர்களுக்கு தான் அந்த காசின் அருமை தெரியும் என வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கடலூர் அருகே திருவந்திபுரம் அருகே நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகங்களை வழங்கிய அவர் பேசும்பொழுது கடலூர் மாவட்டத்தில் 4 லட்சத்து 50 ஆயிரத்து 134 குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. விடுபட்டவர்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 70 ஆயிரம் பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். அவர்களின் விண்ணப்பம் முறையாக ஆய்வு செய்யப்பட்டு, வருகிற 12-ந் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். அன்று உங்கள் செல்போனை பார்த்து கொண்டே இருங்கள் அதில் பணம் வந்து விழும் என தெரிவித்த அவர் அன்புமணி ராமதாஸ், மகளிர் உரிமை தொகையை பிச்சை காசு ஆயிரம் ரூபாய் என கூறி வருகிறார். அந்த ஆயிரம் ரூபாய் கிடைப்பது எவ்வளவு கடினம் என்று உழைக்கின்ற மக்களுக்கு தான் தெரியும். அந்த காசுக்காக தான் தற்போது தந்தையும், மகனும் சண்டை போட்டுக் கொண்டு இருக்கின்றனர். அந்த கட்சிக்கு கொள்கை கிடையாது, இடஒதுக்கீடு கிடையாது, பணம் ஒதுக்கீடு தான் நடக்கிறது என பேசினார்.


