"குறைந்த பணியாளர்கள் இருப்பதால் மின்வாரியத்தில் பல குளறுபடிகள்" - பிரேமலதா குற்றச்சாட்டு!!
குறைந்த பணியாளர்கள் இருப்பதால் மின்வாரியத்தில் பல குளறுபடிகள் ஏற்படுகிறது என்று பிரேமலதா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது தமிழ்நாடு மின்வாரியம். தற்போது மின்வாரியத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளது. குறைந்த பணியாளர்கள் இருப்பதால் மின்வாரியத்தில் பல குளறுபடிகள் ஏற்படுகிறது.உதாரணமாக, wireman என்பவர் வீடுகள், நிறுவனங்கள், மற்றும் அலுவலகங்களுக்கு மின்தடை ஏற்பட்டால், தங்களுக்கு உதவியாக அந்தந்த இடத்தில் உள்ள எலக்ட்ரீசியன்களை கையில் வைத்துக் கொண்டு, தங்கள் சம்பளத்திலிருந்து அவர்களுக்குக் கொஞ்சம் பணம் கொடுக்கிறார்கள், அல்லது மின்தடை ஏற்பட்ட இடத்தில் இருந்தே 50 ரூபாய் 100 ரூபாயென வசூல் செய்கிறார்கள்.
இதனால் சில நேரங்களில் பொதுமக்களுக்கு மின்பணிகள் சரியான முறையில் செய்யப்படாமல் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். போதுமான தொழிலாளர்கள் இருந்தால் இந்த அவல நிலை தேவையில்லை. அரைகுறையாக வேலை தெரிந்தவர்களை வேலை செய்ய வைக்கும்போது, மின்சாரம் தாக்கி இறந்து விட்டால் இவர்கள் மின்வாரியத்தில் பணி புரியவில்லையென மின்வாரியம் கைக்கழுவுகிறது. அதுமட்டுமில்லாமல் புதிதாகக் கட்டப்படும் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு மின் இணைப்புக்காகப் பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. இதற்குக் காரணம் போதுமான அதிகாரிகளும் உபகரணங்களும் இல்லாததுதான்.
மின்வாரியத்தின் அடிமட்டத்தில் என்ன நடக்கிறது என்று அதிகாரிகள் தெரியாமல் இருக்கிறார்கள்.இது போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அரசின் தலையாயக் கடமை. எனவே மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்குத் தகுதியான ஆட்களைப் பணிநியமனம் செய்து,மக்களுக்கு எந்தவித குழப்பங்களையும் ஏற்படுத்தாமல் உடனடியாக இந்தச் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும். இல்லை என்றால் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போலக் காலம் தாழ்ந்து செய்யும் செயல்கள் இந்த அரசுக்கு வினையாக அமையும். உடனடியாக இதில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.