மணிப்பூர் முதல்வரை உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும்: மல்லிகார்ஜுன் கார்கே!
மணிப்பூரில் பிரதமர் மோடியின் மோசமான தோல்வி என்பது மன்னிக்கவே முடியாதது. மணிப்பூர் முன்னாள் ஆளுநர் அனுசுயா உய்கே, மணிப்பூர் மக்களின் குரலை எதிரொலித்துள்ளார். கலவரத்தால் பாதிக்கப்பட்ட மாநில மக்கள் வருத்தமாகவும் சோகமாகவும் இருப்பதாகவும், பிரதமர் மோடி அவர்களை சந்திக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 16 மாதங்களாக மணிப்பூரில் வன்முறைகள் குறையாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதற்கு மோடியும், அமித் ஷாவுமே பொறுப்பு. இருந்தும், பிரதமர் மோடி மணிப்பூரில் ஒரு நொடி கூட செலவிடவில்லை. தனது தகுதியின்மையை வெட்கமின்றி வெளிப்படுத்தி சாதனை படைத்துள்ள பாஜகவின் மணிப்பூர் முதல்வர், பாதுகாப்புக்கான ‘ஒருங்கிணைந்த கட்டளை’யை மாநில அரசுக்கு மாற்றக் கோரியுள்ளார். இந்த ‘ஒருங்கிணைந்த கட்டளை’ மணிப்பூரில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிடுகிறது. மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள், மாநில பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் இந்திய ராணுவத்தின் குழுவால் இது கையாளப்படுகிறது.
பிரதமரைப் போலவே, மத்திய உள்துறை அமைச்சரும் மணிப்பூரில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அரசியலமைப்புச் சட்டப் பொறுப்பை கைவிட்டது போல் தெரிகிறது. மாநில தேர்தல் பேரணிகளில் கலந்துகொண்டு அரசியல் செய்வதில் அவர் மும்முரமாக இருக்கிறார். மணிப்பூரில், ஆளில்லா விமானம் மற்றும் ராக்கெட் மூலம் இயக்கப்படும் கைக்குண்டு தாக்குதல்கள் தொடங்கியுள்ளன. இது, இப்போது தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறி வருகிறது. எனவே, மணிப்பூர் முதல்வர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று இந்திய தேசிய காங்கிரஸ் கோருகிறது. மேலும், பாதுகாப்புச் சூழலுக்கு மத்திய அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும். அரச படைகளின் உதவியுடன் அனைத்து வகையான கிளர்ச்சிக் குழுக்களையும் ஒடுக்க வேண்டும். இன வன்முறை தொடர்பான மணிப்பூர் விசாரணை ஆணையத்தின் விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வன்முறையை விசாரிக்கும் சிபிஐ, என்ஐஏ மற்றும் பிற அமைப்புகளை மோடி அரசு தவறாகப் பயன்படுத்தக் கூடாது.
அனைத்து அரசியல் கட்சிகள், பிரதிநிதிகள் மற்றும் ஒவ்வொரு சமூகத்தின் சிவில் சமூக உறுப்பினர்களையும் அழைத்து அமைதி மற்றும் இயல்புநிலையை வளர்ப்பதற்கான முயற்சிகள் உடனடியாக தொடங்கப்பட வேண்டும். மாநிலத்தில் வன்முறையை நிறுத்த மோடி ஏன் விரும்பவில்லை என்று மணிப்பூர் மக்கள் கேட்கிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தி சமூகத்தினரிடையே ஓராண்டுக்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக மணிப்பூரில் அமைதி திரும்பியிருந்த சூழ்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று குக்கி மற்றும் மைத்தேயி பிரிவினரிடையே மீண்டும் வன்முறை வெடித்தது. இதில், 6 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த பதற்றமான சூழலையடுத்து மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் ஆளுநர் எல்.ஆச்சார்யாவை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். தற்போதைய கலவரம் குறித்து மணிப்பூர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் (உளவுத் துறை) கே கபீப் கூறுகையில், “கடந்த வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் சிலர் நீண்ட தூர ராக்கெட்டுகளை வீசிதாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மீண்டும் வன்முறை மூண்டது. இதில், 6 பேர் உயிரிழந்துள்ளனர். வன்முறைக்கு இலக்கான இடங்கள், மலைகள், பள்ளத்தாக்குகள் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ராணுவ முகாம்களில் இருந்து ஆயுதங்களை கொள்ளையடிக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. 92 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 129 நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று கபீப் தெரிவித்தார்.
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் பேசியதாக சர்சைக்குரிய ஆடியோ ஒன்று அண்மையில் வெளியானது. இது, பழங்குடியின சமூகத்துக்கு தனி நிர்வாகம் கோரி மீண்டும் போராட்டங்களை தூண்டியதாக கூறப்படுகிறது. இருப்பினும், அந்த ஆடியோ சித்தரிக்கப்பட்டவை என்று அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இருப்பினும், பழங்குடியினர் அந்த விளக்கத்தை ஏற்க மறுத்ததுதான் தற்போதைய கலவரத்துக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.