தேர்தல் பொறுப்பில் இருந்து மாணிக்கம் தாகூர் விலகல்..!

 
1

தமிழக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்புக்குழு தலைவராக, மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டார். தவெக கூட்டணியில் காங்கிரசை எப்படியாவது இடம்பெற வைக்க வேண்டும் என படாதபாடு பட்டார். 
ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு என மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சிலர் திமுகவை வலியுறுத்தி வந்த நிலையில், கூட்டணி உடன்பாடு எட்டுவதில் இரு கட்சிகள் இடையே தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது. ஆனாலும், அவருடைய முயற்சிக்கு எந்த பலனும் கிட்டவில்லை. திமுகவுடன் தொகுதி பங்கீட்டை பேசி முடித்து, 28 இடங்களையும் ஒரு ராஜ்யசபா எம்பி பதவியையும் பெற்று விட்டது காங்கிரஸ் தலைமை. 

இதையடுத்து, திமுகவை கடுமையாக விமர்சித்த மாணிக்கம் தாகூர் ஆதரவாளர்கள் தேர்தலில் போட்டியிட்டால், வேலை செய்ய மாட்டோம் என, திமுக மாவட்டச் செயலர்கள், தங்கள் கட்சி தலைமையிடம் தெரிவித்து விட்டனர். 

இதையடுத்து, தொகுதி பங்கீட்டில் மாணிக்கம் தாகூர் தன்னுடைய ஆதரவாளர்களை களம் இறக்க திட்டமிட்டு இருந்த மதுரை வடக்குத் தொகுதியை, காங்கிரசுக்கு கொடுக்காமல் விட்டு விட்டது திமுக தலைமை.அதோடு, தென் மாவட்டங்களில் அவருடைய விருப்பத்தை கேட்காமல் விட்டது தமிழக காங் தலைமை. 

இதனால், கடுமையான விரக்தி அடைந்த மாணிக்கம் தாகூர், காங்., தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக, கட்சி தலைவர் கார்கேவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஏற்கனவே, காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் சிக்கல் நீடித்து வரும் நிலையில், மாணிக்கம் தனது தேர்தல் பொறுப்பில் இருந்து விலகியிருப்பது. பேசுபொருளாகியிருக்கிறது.