மாந்திரீக சடங்கில் உயிருள்ள கோழியை விழுங்கிய நபருக்கு நேர்ந்த சோகம்!

 
1

சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் உள்ள சிந்த்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் யாதவ் (35). திருமணமாகி மனைவியுடன் வசித்து வருகிறார். ஆனால், இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. பல மருத்துவ முயற்சிகள் செய்த போதிலும், அவை பலனளிக்கவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்று குளித்துவிட்டு வீட்டுக்கு வந்த ஆனந்த் யாதவ் திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஆனந்த் யாதவ் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.

இறந்த ஆனந்த் யாதவின் தொண்டையில் உயிருடன் கோழி இருந்தது தெரியவந்தது. மேலும் அவரது உயிரிழப்புக்கு கோழிதான் காரணம் என்பதும் தெரியவந்தது. அதாவது, ஆனந்த் யாதவின் தொண்டையில் உள்ள சுவாசக் குழாய் மற்றும் உணவுக் குழாயை கோழி அடைத்தது. மூச்சுத் திணறல் காரணமாக ஆனந்த் யாதவ் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவமனை தெரிவித்துள்ளது.

பிரேதப் பரிசோதனையை நடத்திய டாக்டர் சாந்து பாக், “இதுவரை 15,000 பிரேதப் பரிசோதனைகள் செய்துள்ளேன். ஆனால் இதுபோன்ற ஒரு விசித்திரமான சம்பவத்தை நான் பார்ப்பது இதுவே முதல் முறை” என்றார். யாதவ் மரணம் தொடர்பான அசாதாரண சூழ்நிலைகள் அமானுஷ்ய நடைமுறைகளுடன் தொடர்புடையது என்று கிராமவாசிகள் குற்றம் சாட்டியதை அடுத்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையாக வேண்டும் என்பதற்காக ஒரு மந்திரவாதியின் சடங்கின் ஒரு பகுதியாக அவர் உயிருள்ள கோழியை விழுங்கியிருக்கலாம் என்று கிராம மக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.