பாலியல் துன்புறுத்தல் விவகாரம்- புகாரளித்தால் விசாரணை: மகளிர் ஆணையம்
கேரளாவில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில் புகார் அளித்தால் விசாரிக்கப்படும் என தேசிய மகளிர் ஆணையம் அறிவித்துள்ளது.
மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த நீதிபதி ஹேமா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஹேமா கமிட்டி ரிப்போர்ட் வெளியான பின்னர் பல நடிகைகள், தங்களுக்கும் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாக தற்போது கூறி வருகின்றனர். இதனையடுத்து பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு அமைத்துள்ளது. இதனிடையே பெங்காலி மொழி நடிகை ஸ்ரீலேகா மித்ரா, பிரபல இயக்குநரும் மலையாள சினிமா அகாடமி தலைவருமான ரஞ்சித் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். இதேபோல் துணை நடிகை ரேவதி சம்பத், நடிகர் சித்திக் மீது பாலியல் புகாரளித்தார். இவ்வாறாக நடிகர்கள் முகேஷ், மணியம்பிள்ளை ராஜு, இடைவேளை பாபு, ஜெயசூர்யா, ரியாஸ் கான், நடிகர்கள் பாபுராஜ், ஷான் டைம் சாக்கோ மற்றும் சில தயாரிப்பு நிர்வாகிகள் மீதும் இதுவரை 8 நடிகைகள் பாலியல் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் கேரளாவில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில் புகார் அளித்தால் விசாரிக்கப்படும் என தேசிய மகளிர் ஆணையம் அறிவித்துள்ளது. பாலியல் துன்புறுத்தல் விவகாரம் குறித்து, தங்களிடமும் புகார் அளிக்கலாம் என்றும் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.