"விற்றால் போதும்...கஜானா நிறைந்தால் போதும்..என்ற மனப்பான்மை ஆபத்தானது" - கமல் ஹாசன் காட்டம்!!

 
tn

சென்னை திருவான்மியூர் நடுகுப்பம் வேம்புலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாபு ,அருண், தினேஷ் ஆகிய 3 பேரும் அப்பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.  குடிபோதையில் மூன்று பேரும் இருந்த நிலையில் அருண் விளையாட்டாக செருப்பை எடுத்து வீச அது  தினேஷின் சாப்பாடு தட்டில் விழுந்ததாக  தெரிகிறது.  இதில் அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் அருணும் , பாபுவும் ஒன்றுசேர்ந்து தினேஷை தாக்கியுள்ளனர். 

Death

இதை எடுத்து இரவு 11 மணியளவில் தினேஷ் கையில் மின்வெட்டும் கத்தியுடன் அருணையும்,  பாபுவையும் விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டி கொலை செய்தார். மது போதையில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  அதேபோல் குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள தெற்குவிளையை சேர்ந்த ஜான் ஜெயக்குமார் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும்போது மது அருந்துவிட்டு ,  மீதமுள்ள மதுவை குடிக்கலாம் என்று அந்த பாட்டிலை இடுப்பில் சொருகி வைத்த படி நடந்து வந்துள்ளார்.  இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இடுப்பில் சொருகி வைத்திருந்த மது பாட்டில் உடைந்து ஜெயக்குமார் வயிற்றில் குத்தி உள்ளது. இதில் அவர் உயிரிழந்துள்ளார். இப்படி மதுபோதை காரணமாக பல சம்பவங்கள் நேற்று ஒரு நாளில் நடந்துள்ளது.

death

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிட்டுள்ள பதிவில், "உழைப்பாளர் தினத்தன்று மது விற்பனை 252 கோடியை தாண்டியிருக்கிறது. அதே நாளில் திருவான்மியூரில் மதுபோதை தகராறில் 22 வயது அருணும், 27 வயது பாபுவும் கொலை செய்யப்பட்டுள்ளனர். அருமனையில் போதையில் கீழே விழுந்த 40 வயது ஜான் ஜெயக்குமார் இடுப்பில் சொருகியிருந்த மதுபாட்டில்  குத்தி உயிரிழந்தார். மதுவால் தமிழக இளைஞர்கள் வாழ்விழந்து கொண்டிருக்கிறார்கள். பள்ளி மாணவர்களிடம் கூட மதுபானங்கள் புழங்குகிறது. மது விற்பனையைக் கட்டுப்படுத்தவோ, பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்டெடுக்கவோ, சிறார்களிடம் மதுபானங்கள் கிடைப்பதைத் தடுக்கவோ தமிழக அரசு எந்த  முயற்சியையும் எடுத்ததாகத் தெரியவில்லை.விற்றால் போதும்...கஜானா நிறைந்தால் போதும்..என்ற மனப்பான்மை ஆபத்தானது!" என்று குறிப்பிட்டுள்ளது.