மகாவிஷ்ணு விவகாரம்: மீண்டும் சென்னைக்கே மாறுதல் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்..
மகாவிஷ்ணு சர்ச்சை விவகாரத்தில் பணியிட மாறுதல் செய்யப்பட்ட இரண்டு தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னைக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பரம்பொருள் பவுண்டேஷனை சேர்ந்த மகாவிஷ்ணு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, இது தொடர்பாக அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் தலைமை ஆசிரியர் தமிழரசி, திருவள்ளூர் மாவட்டம் பென்னலூர் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். அதேபோன்று சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவுகள் கடந்த 6ம் தேதி பிறப்பிக்கப்பட்டன.
இரண்டு தலைமையாசிரியர்களும் புதிய பணியிடங்களில் சேராமல் மீண்டும் சென்னைக்கு மாறுதல் பெற தீவிர முயற்சி எடுத்தனர். இரண்டு தலைமை ஆசிரியர்களுக்கு ஆதரவாக ஆசிரியர் இயக்கங்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தன. இந்த நிலையில், இரண்டு தலைமை ஆசிரியர்களின் பணியிட மாறுதல் உத்தரவையும் ரத்து செய்து, மீண்டும் சென்னைக்கு பணியிடமாறுதல் வழங்கி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி தமிழரசி, விருகம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். விருகம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை வாசுகி , அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக, அடையார் ஊரூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும் டேவிட் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. சண்முகசுந்தரம், அடையார் ஊரூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.