டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிர்ப்பு- விவசாயிகளின் பிரம்மாண்ட பேரணியால் திணறிய மதுரை

 
மதுரை

டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மேலூர் ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மேலூர் அருகே நரசிங்கம்பட்டி பகுதியில் இருந்து மதுரை தல்லாகுளம் வரை விவசாயிகள், பொதுமக்கள் ஒன்றிணைந்து பேரணியாக சென்று மதுரை நகரில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்கம் அறிவித்திருந்தது. 

Image

மதுரை நரசிங்கம்பட்டியில் பெருமாள் மலையில் இருந்து நடைபயண பேரணியாக முல்லைப் பெரியார் ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் மேலூர் பகுதியில் பல்வேறு கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நடைபயணமாக கிளம்ப முயன்ற நிலையில் அவர்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தடுத்து நிறுத்தினர். இந்த நிலையில் தொடர்ந்து அளவுக்கு அதிகமான பொதுமக்கள் நடைபயணமாக திரண்ட நிலையில் காவல்துறை அவர்களை கட்டுப்படுத்த முடியாததால் நரசிங்கம்பட்டியில் இருந்து பேரணியாக ஆயிரக்கணக்கானவர்கள் நடைபயணமாக கிளம்பினர். மாங்குளம் பிரிவில் காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்ற போது அங்கு போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

இதனையடுத்து காவல்துறையின் தடையை மீறி பேரணியாக சென்ற நிலையில் வெள்ளரிப்பட்டி சிக்னல் அருகில் பேரிக்காடுகள் மூலமாக காவல்துறையினர் மீண்டும் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த முயன்ற நிலையில் அது தோல்வி அடைந்தது. தொடர்ந்து காவல்துறை வாகனத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள்  அமைதியான முறையில் நாம் போராட்டம் நடத்துவோம் என மைக் மூலமாக பேசினர். இதனை அடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் காவல்துறையினர் நடைபயண பேரணியை அனுமதித்தனர். பொதுமக்கள் பலரும் வாகனங்களில் பேரணியாக மதுரை தமுக்கம் மைதானம் பகுதிக்கு வந்தனர். 9மணிக்கு கிளம்பிய பேரணி மதுரை தமுக்கம் மைதானத்திற்கு 5 மணி நேர  வந்து சேர்ந்தனர்.இவர்களுக்கு வழிநெடுக குளிப்பானம்,தண்ணீர்,உணவு பொதுமக்களால் வழங்கப்பட்டது. 

மதுரை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட காவல்துறையினர் அனுமதி மறுத்து பேரிகாடுகள் மூலமாக போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். விவசாயிகளில் ஒரு பிரிவினர் மேலூர் மற்றும் தமுக்கம் மைதான சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டதால் காவல்துறையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தமுக்கம் மைதானம் பிரதான சாலையில் தரையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டிங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிராக தங்களின் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெறும் எனவும், மாநில அரசு வலுவான நடவடிக்கையும் மத்திய அரசு நிரந்தர நடவடிக்கையாக டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க வேண்டும் கோரிக்கை ஏற்க விட்டால் போராட்டங்கள் தீவிரமாக நடத்தப்படும் என முல்லைப் பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கத்தினர் எச்சரித்தனர்.