’செல்லூர் ராஜூவையும் விசாரிங்க’... மதுரை அதிமுக ஆய்வு கூட்டத்தில் நிர்வாகிகள் அடிதடி!
அதிமுகவின் மதுரை மாநகர் மாவட்ட கழகத்திற்கான கள ஆய்வுக் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தனியார் அரங்கில் துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன், அமைப்பு செயலாளர் செம்மலை, மாவட்ட செயலாளர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பகுதி கழக செயலாளரிடம் உறுப்பினர் சேர்க்கை குறித்து விசாரித்துக் கொண்டிருந்த போது, அதிமுக உறுப்பினர்களான பைகரா பகுதியை சேர்ந்த இளஞ்செழியன் மற்றும் பீபி குளம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோர் மேடைக்கு வந்து, பகுதிக் கழக நிர்வாகிகளை விசாரிப்பது போல மாவட்ட செயலாளர் செல்லூர் ராஜூவையும் விசாரிக்க வேண்டும் என தெரிவித்தனர். உடனே சட்டென்று அங்கிருந்த நிர்வாகிகள் இருவரையும் மேடையில் இருந்து தள்ளி விட்டு கடுமையாக தாக்கியதால் மோதல் ஏற்பட்டு பதற்றமான சூழல் நிலவியது.
நத்தம் விஸ்வநாதன், செம்மலை உள்ளிட்டோர் சமாதானம் செய்ததை தொடர்ந்து மேடையில் அமர்ந்திருந்த டாக்டர் சரவணனுக்கு எதிராக சிலர் கோஷம் எழுப்பினர். பின்னர், "என்ன நடந்தது என்று எங்களுக்கே இன்னும் புரியவில்லை" என மேடையில் நத்தம் விஸ்வநாதன் சமாதானம் செய்து பேசுகையில், கட்சியை செயல்பட விடாமல் சிலர் தடுப்பதாக நிர்வாகிகள் கூச்சலிட்டனர். சம்பவத்தை கேள்விப்பட்டு அரங்கத்தின் உள்ளே வந்த காவல்துறையினரிடம், இது கட்சி விவகாரம் காவல்துறை இதில் தலையிட வேண்டாம் என நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.