"மக்களிடையே பக்தி குறைந்ததுதான் திடீர் மழைக்கு காரணம்" - மதுரை ஆதீனம்
தமிழகத்தில் இன்றைக்கு பருவம் தவறிய மழை பொழிவதற்கு இளைஞர்களிடையே பக்தி குறைவாக இருப்பது தான் காரணம் என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 நாட்களாக பெய்த மழை சென்னையை புரட்டிப்போட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திங்கள்கிழமை இரவு தொடங்கி நேற்று இரவு வரை கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை மாநகரின் பல்வேறு சாலைகளிலும் நேற்று மழை நீர் தேங்கியது. பல இடங்களில் குடியிருப்புப் பகுதிகளிலும் மழைநீர் புகுந்ததுடன், ஆங்காங்கே மரங்களும் முறிந்து விழுந்தன. இவை அனைத்தும் மாநகராட்சி ஊழியர்களால் உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகின்றன. சென்னையில் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று முதலமைச்சர், அமைச்சர்கள், மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். சென்னை மட்டுமின்றி, கோவை, மதுரை, சிவகங்கை, டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்துவாங்கிறது.
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், “தமிழகத்தில் இன்றைக்கு பருவம் தவறிய மழை பொழிவதற்கு இளைஞர்களிடையே பக்தி குறைவாக இருப்பது தான் காரணம். கோயில் இடங்களை வைத்திருப்பவர்கள் எல்லாம் சரியாக குத்தகை கொடுப்பதில்லை. அதனால் தான் பருவம் தவறி மழை பெய்கிறது” என்றார்.