தீபாவளி தீக்காயங்களினால் 20 பேர் அரசு மருத்துவமனைகளில் அனுமதி- அமைச்சர் மா.சு.
தமிழ்நாட்டில் தீபாவளி தீக்காயங்களினால் 20 பேர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தீக்காயங்களினால் பாதிப்படைந்தவர்கள் 15 சதவீதத்திற்கும் குறைவான பாதிப்போடு சிகிச்சை பெற்று வருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தீபாவளி திருநாள் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனை தீக்காய சிகிச்சை பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தீக்காயம் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு துறை மற்றும் மருத்துவத்துறையில் விழிப்புணர்வால் அதிக விபத்துக்கள் குறைக்கப்பட்டுள்ளளது. தீபாவளி தீக்காய சிகிச்சைக்காக 25 படுக்கைகள் கொண்ட சிறப்பு பிரிவு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காய பிரிவில் தயாராக உள்ளது. பட்டாசு வெடிப்புகளால் கடந்த மூன்று ஆண்டுகளாக உயிரிழப்பு இல்லாத தீபாவளியாக உள்ளது.
மக்கள் விழிப்புணர்வோடு இருப்பதும் அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை இருந்தால் இதற்கு பெரிய அளவில் காரணம். கடந்த 24 மணி நேரத்தில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஏழு பேர் தீக்காயை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நான்கு பேர் வீடு திரும்பியுள்ளனர். இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 12 சதவீதத்திற்கும் குறைவாகவே தீக்காயம் இருக்கிறது. அவர்கள் விரைவில் வீடு திரும்புவார்கள்.
ஸ்டான்லி மருத்துவமனையில் மூன்று பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையைத் தவிர மதுரையில் ஐந்து பேர், தஞ்சாவூரில் ஆறு பேர் மற்றும் திருச்சியில் மூன்று பேரும் தீக்காயப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரிய அளவில் யாருக்கும் பாதிப்பு இல்லை. 1363 எண்ணிக்கையிலான 108 வாகனங்கள் இன்று பணியில் உள்ளன. 70 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பணியில் இருக்கின்றனர். விபத்துல்லா தீபாவளியாக இந்த ஆண்டு மக்கள் விழிப்புணர்வோடு கொண்டாட வேண்டும்” என்றார்.