சென்னைக்கு 390 கிமீ தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம்!
வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 390 கிமீ தூரத்தில் நிலைகொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், சென்னைக்கு 390 கிமீ கிழக்கில் மையம் கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கிமீ வேகத்தில் வடகிழக்கு திசையில் நகர்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் (டிச.22 காலை 6 மணி) தொடர்ந்து வடகிழக்கு திசையில் நகர கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 22-12-2024 முதல் 24-12-2024 வரை: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25-12-2024 மற்றும் 26-12-2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.