வந்தவாசி: ஆன்லைனில் லாட்டரி சீட்டு விற்பனை.. இருவர் கைது.. சிக்கிய பணம், நகைகளால் வியப்பில் போலீஸ்..
திருவண்ணாமலையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை ஆன்லைனில் விற்பனை செய்துவந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.48.50 லட்சம், 83 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பொட்டி நாயுடு தெருவை சேர்ந்தவர் அருண்(எ) அருணாச்சலம். இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டை ஆன்லைன் மூலமாக ரூ. 20 முதல் ரூ.250 வரை விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் கிடைத்த வருமானம் மூலம் இரண்டு வீடுகள் கட்டி ஒரு வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். மற்றொரு வீட்டில் தனது குடும்பத்துடன் ஆடம்பரமாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அருணாச்சலம் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்று வருவதாக, வந்தவாசி காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா (பொறுப்பு), வந்தவாசி காவல் துணை கண்காணிப்பாளர் கங்காதரன் மற்றும் போலீசார் வந்தவாசி யாதவர் தெரு முகப்பில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த அருணாச்சலத்தை மடக்கி விசாரணை செய்ததில், முன்னுக்கு முரணான பதில் அளித்துள்ளார்.இதனையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், ஆன்லைனில் லாட்டரி சீட்டை நடத்தி வருவது தெரியவந்தது. பின்னர் அவரது வீட்டிற்கு சென்று சோதனை நடத்தியதில், போலீஸாரே வியப்படையும் வகையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன.
ஆடம்பரமான சொகுசு வீட்டை அங்குலம் அங்குலமாக சோதனை செய்ததில் தனி அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 48.50 லட்சம் பணம், 83 சவரன் தங்க நகைகள், ஒரு மடிக்கணினி, 6 செல்ஃபோன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரது மடிக்கணினி சோதனை செய்த போது, ஆன்லைன் மூலம் பல்வேறு இடங்களுக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டை ஆன்லைன் மூலமாக விற்பனை நடத்துவது தெரியவந்தது. மேலும் விசாரணையில் வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் ஏஜென்ட்டுகள் மூலமாகவும், வாடிக்கையாளர் மூலமாக விற்பனை செய்தது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அருணாச்சலத்துடன், செங்கல்பட்டு மாவட்டம் கோகுல்புரம் பகுதியை சேர்ந்த சையத் இப்ராஹிமுக்கும் இதில் தொடர்பிருப்பது தெரியவந்தது. பின்னர் வந்தவாசி போலீசார் செங்கல்பட்டு பகுதிக்கு சென்று சையத் இப்ராஹிமையும் கைது செய்து, வந்தவாசி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் இரண்டு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.