சட்னியில் பல்லி... 8 பேருக்கு வாந்தி, மயக்கம்
வாணியம்பாடி அருகே தனியார் உணவகத்தில் இருந்து வாங்கிய டிபன் உடன் கொடுத்த சட்னியில் பல்லி இருந்ததால் டிபன் சாப்பிட்ட 4 குழந்தைகள் உட்பட 8 பேர் முன் எச்சரிக்கையாக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பத்தாப்பேட்டை பகுதியை சேர்ந்த சுப்பிரமணி(70). இவர் நேற்று இரவு உடல்நிலை குறைவால் இயற்கை மரணமடைந்தார்.
இவருடைய துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவருடைய உறவினர்கள் ஆம்பூரில் வந்துள்ளனர். அப்போது பத்தாப்பேட்டை பகுதியை சுபாஷ் என்பவர் மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து சாலை ஓரத்தில் இருந்த உணவகத்தில் இருந்து டிபனாக இட்லி வாங்கி வந்துள்ளார். இதனை 4 குழந்தைகள் உட்பட 8 பேர் உட்கொண்டு இருந்த போது சட்னியில் பல்லி இறந்து கிடைப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக டிபன் சாப்பிட்ட 8 பேரும் முன் எச்சரிக்கையாக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிராமிய போலீஸார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.