‘வேளாண் சட்டங்கள் போன்று, ஒரே தேர்தல் ஒரே நாடு திட்டத்தையும் திரும்ப பெறுவார்கள்’ - செல்வப்பெருந்தகை
மூன்று வேளாண் சட்ட விவகாரத்தில் பின்வாங்கியதுப் போல ஒரே தேர்தல் ஒரே நாடு திட்டத்தையும் திரும்ப பெறுவார்கள் என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை சாடியுள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அவர் பேசியதாவது, “ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பரிந்துரை பேரில் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்; ஒரே கொடி; ஒரே ஆட்சி; ஒரே மொழி’ என்ற ஒற்றை சொல்லில் ஆர்எஸ்எஸ், பாஜக ஒரு அஜாண்டாவை வைத்துள்ளார்கள். இந்த திட்டத்தை இந்திய தேச மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், நிராகரிப்பார்கள்.
இதே போல் தான் மூன்று வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று புதிய வேளாண்மை சட்டத்தை யாருக்கும் தெரியாமல் அவர்கள் பரிந்துரை செய்து நாடாளுமன்றத்தில் இரவோடு இரவாக நிறைவேற்றி வேளாண்மை குடிமக்கள் மீது திணித்தார்கள் போராட்டத்தின் வெளிப்பாடாக தாக்குப் பிடிக்க முடியாமல் எந்த வேகத்தில் கொண்டு வந்தார்களோ அதே வேகத்தில் மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றார்கள் . அதேபோன்று ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதையும் திரும்ப பெறுவார்கள் இதனை நிறைவேற்ற வாய்ப்பே கிடையாது. எதுவெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராதோ அதையெல்லாம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற ஒரு பாசிச தான் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
ஒரே நாடு ஒரே தேர்தல் 2026 ஆம் ஆண்டு மே மாதம் தமிழ்நாட்டில் தேர்தல் நடக்க இருக்கிறது. கேரளாவில் உள்பட மூன்று, நான்கு மாநிலங்களில் தேர்தல் நடக்க இருக்கிறது. டிசம்பர் மாதம் 5 மாநில தேர்தல் நடக்க இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலை சட்டமன்றத் தேர்தலோடு வைக்க நேர்ந்தால், நாடாளுமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு, ஜனதா தளத்தின் தலைவர் நிதீஷ் குமார் ஆதரவு அளித்து வருகிறார்கள். நிதீஷ் குமாரும் சந்திரபாபு நாயுடுவோம் நாடாளுமன்றத்தில் கூட்டணியில் இருந்து விலகினால் , இந்த ஆட்சி கவிழும் அப்பொழுது எல்லா மாநிலத்திற்கும் தேர்தல் நடத்துவார்களா என்ற கேள்வி எழுகிறது.
ஏதாவது ஒரு மாநிலத்தில் தொங்கு சட்டமன்றம் அமைந்து விட்டால் அங்கு ஐந்தாண்டுகள் ஆட்சி செய்ய முடியாத நிலையில், ஆட்சி கவிழ்ந்தால் மீண்டும் நாடாளுமன்றத்திற்கும் எல்லா சட்டமன்றத்திற்கும் தேர்தலை நடத்த முடியுமா? சாத்தியமே இல்லாததை ஏன் இவர்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு நாடு ஒரு தேர்தல் என்பது வருவது மிக மிக கடினம். இரண்டு மூன்று மாநிலங்களுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்றாலே தமிழ்நாட்டில் இருந்து தேர்தல் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக வெளி மாநிலங்களுக்கு செல்கிறார்கள். நம்மிடம் போதுமான அளவிற்கு பாரா மிலிட்டிரி கிடையாது, போதுமான அளவிற்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கிடையாது, எதுவுமே முழுதாக இல்லாத ஒரே நாடு ஒரே தேர்தல் எப்படி நடத்த முடியும்.
சாலைகளே இல்லாத மலைவாழ் மக்கள் வாழும் மலைப் பகுதிகளில் குதிரைகளிலும் கழுதைகளிலும் வாக்கு இயந்திர பெட்டிகளை கொண்டு செல்வதை நாம் பார்த்து வருகிறோம். சாத்தியம் இல்லாததை எதற்காக இவர்கள் சிந்திக்கிறார்கள். ஒரு போதும் இந்த திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஊருக்கு போவதற்கு சரியான வழியை காட்டாமல், சரியில்லாத வழியை காட்டுவது போன்றது இவர்களுடைய நோக்கம்; ஒருபோதும் வெற்றி பெறாது. இந்திய நாட்டு மக்கள் ஒருபோதும் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
புதிய வேளாண்மை சட்டத்தை கொண்டு வரும் பொழுதும் எல்லா கட்சிகளும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பாராளுமன்றத்தில் விவாதமே இல்லாமல் புதிய வேளாண்மை சட்டத்தை நிறைவேற்றி வேகமாக கொண்டு வந்து அதே வேகத்தில் அதனை திரும்ப பெற்றார்கள். அதேபோன்று காஷ்மீர் விவகாரம் ஆர்டிகள் 370 எல்லாவற்றையும் சிந்திக்காமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவசர கோலத்தில் அள்ளித் தெளிக்கும் வேலையை தான் பாஜக அரசு கொண்டு வருகிறது.
ஒரு போதும் இதனை சட்டமாக ஆக்க முடியாது; அதற்கு வாய்ப்பே கிடையாது. அது சட்டமாக வந்தாலும் அவர்களுடைய நோக்கம் வெற்றி பெறாது. ஒரு நாடு ஒரு தேர்தல் என்பது வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. ஏனென்றால் எல்லா தரப்பு மக்களும் கதம்பம் பூ மாலை எல்லாம் மலர்களாலும் தொகுக்கப்பட்ட எல்லா மாநிலங்களையும் உள்ளடக்கிய ஒரு ஒன்றியமாக இந்தியா உள்ளது. அதன் கீழ் இந்தியாவில் ஆட்சி நடைபெறுகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது. கலாச்சாரம், பண்பாடு, மொழி, இலக்கியம் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வேறுபாடு இருக்கிறது. இந்த அடிப்படையில் முழுவதாக நூற்றுக்கு நூறு சதவீதம் மாநிலங்களில் பெரும்பான்மை கொண்ட ஆட்சி அமையும் என்பது கேள்விக்குறி . பெரும்பான்மை ஆட்சி இல்லாத பொழுது என்றைக்கு வேண்டுமென்றாலும் மாநிலத்தில் ஆட்சி கவிழலம் ஆட்சி பறிபோகின்ற பொழுது, மாநிலங்களின் ஆட்சியையும் கலைத்து விட்டு நாடாளுமன்ற கலைத்துவிட்டு உடனே ஒரு நாடு ஒரு தேர்தல் நடத்துவது என்றால் எப்படி வாய்ப்பு இருக்கிறது. அதற்கு வாய்ப்பே கிடையாது. ஒரு பொழுதும் பாஜக ஆர் எஸ் எஸ் செயல் திட்டங்களில் எதிர்கட்சிகள் உடன்படாது காங்கிரஸ் பேரியக்கம் கடுமையாக எதிர்கிறது” என்று தெரிவித்தார்..