மயக்க மருந்து கொடுத்து சிறுமியை வன்கொடுமை செய்தவருக்கு சாகும்வரை ஆயுள்

 
teen girl rape for one year

புதுக்கோட்டை அருகே குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து  17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

“பள்ளி மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து”  7 மாதம் கர்ப்பமாக்கியவர் போக்ஸோவில் கைது!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மறவாமதுரை பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார்(34). இவர் ஏற்கனவே இரண்டு திருமணம் செய்தவர். கடந்த 2019 ம் ஆண்டு அவரது வீட்டின் அருகே உள்ள 17 வயது சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, சிறுமி மயக்கநிலையில் இருந்தபோது பாலியல் தாக்குதலில் ஈடுபட்டார். மேலும் கொலை மிரட்டல் கொடுத்து இதேபோன்று தொடர்ந்து பலமுறை பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளார். 

இந்நிலையில், கடந்த 2020ஆண்டு சிறுமி 7 மாதம் கர்ப்பமான நிலையில் இது பெற்றோருக்கு தெரியவந்ததால் சிறுமியிடம் பெற்றோர் நடத்திய விசாரணையில் நடந்தவற்றை சிறுமி கூறியுள்ளார். இதனையடுத்து காரையூர் காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து புகார் அளித்தனர். அதன்பேரில் ராஜ்குமார் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. மேலும் ராஜ்குமார் சிறுமியின் கர்ப்பத்தை கலைக்கவும் முயன்றது விசாரணையில் தெரியவந்தது. மேலும், டிஎன்ஏ சோதனையில் தந்தை இவர்தான் என உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா, ராஜ்குமார் மீது சுமத்தப்பட்ட குற்றம் உறுதியானதால், சாகும் வரை ஆயுள் தண்டனையும், 75 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் சிறுமிக்கு ஏற்கனவே 4 லட்சம் ரூபாய் அரசு சார்பில் வழங்கப்பட்ட நிலையில் மேலும் ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ராஜ்குமார் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.