‘வரலாறு படைத்த அண்ணாவின் பணிகளை போற்றுவோம்’ - தவெக தலைவர் விஜய்..
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி, அண்ணாவின் பணிகளை போற்றுவோம் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் 116-வது ஆண்டு பிறந்த தினம் இன்று, தமிழ்நாடு முழுவதும் திராவிட கட்சிகளால் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை ஒட்டி, சென்னை அண்ணா சாலை அருகே உள்ள அண்ணாவின் சிலைக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மலர்த்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அதேபோல் அவரது சாதனைகளை நினைவுகூர்ந்து நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பதிவில் அண்ணாவின் பணிகளை போற்றுவோம் என்று தெரிவித்துள்ளார். மேலும், “சுயமரியாதை திருமணங்களைச் சட்டப்பூர்வமாக்கியது, ‘மதராஸ் மாநிலம்’ என்ற பெயரைத் ‘தமிழ்நாடு’ என மாற்றியது. தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையைச் செயல்படுத்திய என்று தமிழக அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்த பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில் அவர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய பணிகளை என்றென்றும் போற்றி மகிழ்வோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.