சென்னையை இந்தியாவின் முதன்மை நகரமாக மாற்ற அனைவரும் உறுதியேற்போம் – அன்புமணி..!
ஆகஸ்ட் 22-ம் தேதி ‘சென்னை தினம்’ கொண்டாடப்படுகிறது. சென்னை ‘385’ வயதை எட்டியிருக்கும் சூழலில் பல்வேறு கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னை மாநகரம் தோற்றுவிக்கப்பட்ட தினத்தை குறிக்கும் வகையில் 385-ஆம் சென்னை நாளைக் கொண்டாடும் சென்னை மாநகர மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை மண் பாட்டாளிகளின் மண். பூர்வகுடி மக்களின் மண். அவர்களின் உழைப்பு தான் சென்னையை இந்த அளவுக்கு வளர்ச்சியடைந்த மாநகரமாக மாற்றியிருக்கிறது.
வரலாறு பதிவு செய்திருப்பதைப் போல, சென்னப்ப நாயகர் உள்ளிட்ட சிலரின் நிலங்களை வாங்கி அதில் சென்னை மாநகரத்தை அமைப்பதற்கான அனுமதி பத்திரம் கையெழுத்திடப்பட்ட நாளே சென்னை நாளாக கொண்டாடப்படுகிறது. ஒருபுறம் சென்னை நாளை கொண்டாடும் நாம், இன்னொருபுறம், சென்னையின் பூர்வகுடிமக்களை சென்னைக்கு வெளியே அனுப்பி வைத்திருப்பது தான் நகைமுரணாகும். வளர்ச்சியடைந்த மாநகரமாக மாற்றியுள்ள நாம், இந்தியாவின் முதன்மை நகரமாக மாற்ற வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்.” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.