திருப்பதி ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் சிறுத்தை வந்ததால் பரபரப்பு

 
திருப்பதி

சிறுத்தை பார்த்த செக்யூரிட்டி ஊழியர் அறைக்குள் சென்று கதவை பூட்டி கொண்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

திருப்பதி அடுத்த சந்திரகிரி அருகே உள்ள ஸ்ரீ வாரி மெட்டு மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த காலங்களில் அலிபிரி நடைப்பாதையில் பாத யாத்திரையாக நடந்து சென்ற பக்தர்கள் மீது சிறுத்தை தாக்கப்பட்டதால்  அப்போது   வனத்துறையினருடன் இணைந்து கூண்டு வைத்து சுமார் நான்கு சிறுத்தைகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். 

இந்நிலையில்   திருப்பதி ஸ்ரீவாரி மெட்டு அருகே சிறுத்தை ஒன்று சுற்றித் திரிவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.  சனிக்கிழமை நள்ளிரவில், கட்டுப்பாட்டு அறைக்கு அருகே சிறுத்தை வருவதைக் கவனித்த அங்கு பணியில் இருந்த தேவஸ்தான விஜிலென்ஸ் செக்யூரிட்டி பயந்து கட்டுப்பாட்டு அறைக்குள் சென்று பூட்டி கொண்டார். பின்னர் தேவஸ்தான மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் கொடுத்துள்ளார்.  இந்த சம்பவம் குறித்து வனத்துறை மற்றும் தேவஸ்தான  அதிகாரிகள் சி.சி.கேமிரா காட்சிகளை வைத்து  சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.