கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு- மேலும் ஒரு நாதக தம்பி கைது
கிருஷ்ணகிரி அருகே போலி என்.சி.சி. முகாம் நடத்தி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி அடுத்த கந்திகுப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த ஆகஸ்ட் மாதம் போலி என்.சி.சி. முகாம் நடந்தது. இதில் பங்கேற்ற 13 வயதுடைய எட்டாம் வகுப்பு மாணவி போலி NCC பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியுமான சிவராமன் என்பவரால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானார். மேலும், 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை நடந்தது. இவ்வழக்கை பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்த நிலையில், தமிழக அரசு இந்த வழக்கை விசாரிக்க ஐ.ஜி., பவானீஸ்வரி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது.
இவ்வழக்கில் சிவராமன் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளி தாளாளர், பள்ளி முதல்வர், ஆசிரியைகள் என 11 பேர் முதலில் கைது செய்யப்பட்டனர். அதே போல சிவராமன் கிருஷ்ணகிரி அருகே மற்றொரு பள்ளியிலும் போலி என்.சி.சி., முகாம் நடத்தி அங்கும் ஒரு மாணவியை பலாத்காரம் செய்தது தெரிந்தது. அந்த புகார்படியும், அதே போல வேறு எங்கெல்லாம் போலி என்.சி.சி., முகாம் நடத்தப்பட்டது என சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் கைதான சிவராமன், கைது நடவடிக்கைக்கு முன், எலிமருந்து தின்ற நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த, ஆகஸ்ட் 23ல், இறந்தார். சிவராமன் நீங்கலாக மொத்தம் 18 பேரை போலீசார் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில், காவேரிப்பட்டணத்தை சேர்ந்த ரவி, 30 என்பவரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர். இதன் மூலம் இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. சிவராமனின் நண்பரான இவர் சிவராமன் செய்த குற்ற செயல்களுக்கு உடந்தையாக இருந்துள்ளார் என போலீசார் கூறினர். மேலும், இவரை நண்பர்கள் 'கில்மா' ரவி என்று அழைத்ததும், நாம் தமிழர் கட்சியில் இவர் உறுப்பினராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.