கிருஷ்ணகிரி பள்ளி மாணவி வன்கொடுமை- மேலும் ஒருவர் கைது
கிருஷ்ணகிரி அருகே போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளி ஒன்றில் போலி என்.சி.சி. முகாம் கடந்த 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடந்தது. அதில் பங்கேற்ற 8-ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவிக்கு போலி பயிற்சியாளர் சிவராமன் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மேலும் சில மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானார்கள். இது தொடர்பாக சிவராமன், உடந்தையாக இருந்த பள்ளி தாளாளர், முதல்வர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு போலீஸ் ஐ.ஜி.பவானீஸ்வரி தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். கைது நடவடிக்கைக்கு முன்பாக விஷம் குடித்த சிவராமன், கடந்த 23-ந் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதற்கிடையே கிருஷ்ணகிரி அருகே கடந்த 8-ந் தேதி மாணவி பாலியல் சீண்டல் சம்பவம் தொடர்பாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமராஜ் நகரை சேர்ந்த சுதாகர் ( 44), என்பரை போலீஸார் கைது செய்துள்ளனர். அதே போல் கடந்த ஜனவரி மாதம் மற்றொரு பள்ளியில் போலியாக என்.சி.சி. முகாம் நடத்தி, 9-ம் வகுப்பு படித்த 14 வயது மாணவி சிவராமனால் பாலியல் சீண்டல் செய்யப்பட்டார். அது தொடர்பாக கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அந்த வழக்கு தொடர்பாக கிருஷ்ணகிரியை சேர்ந்த கமல் (30), என்பவரையும் கைது செய்தனர்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி அருகே போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். காவேரிப்பட்டினம் பகுதியை சேர்ந்த டேனியல் அருள்ராஜ் என்ற ஜிம் மாஸ்டர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் சம்பவத்தின் போது சிவராமனுக்கு உடந்தையாக இருந்தது சிறப்பு புலாண்ய்வு குழு விசாரனையில் தெரியவந்தது. இதுவரை இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.