கொடநாடு வழக்கு- கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் செல்போன் குறித்து விசாரணை

 
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கும் பங்கு இருக்கு! பகீர் வாக்குமூலம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தற்கொலை செய்து கொண்ட கொடநாடு எஸ்டேட் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷின் செல்போன் குறித்து அவரது தந்தையிடம் சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணை நடத்தியுள்ளனர்.

கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ந்தேதி நள்ளிரவு நடைபெற்றது. அதில் இரவு காவலாளி ஓம் பகதூர் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை கொள்ளை சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டனர். இதில் மூளையாக செயல்பட்ட கனகராஜ் சம்பவம் நடைபெற்ற 3-வது நாள் சேலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3-ந்தேதி கொடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வந்த தினேஷ் என்ற இளைஞர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர்களது இறப்பு கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் அது குறித்து சோலூர் மட்டம் போலிசார் வழக்கு பதிவு கொடநாடு கொலை கொள்ளை சம்பவத்திற்கும் தினேஷின் தற்கொலைக்கும் சம்பந்தம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரித்தனர். 

இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு கொடநாடு கொலை கொள்ளை வழக்கு ADSP கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டு தனிபடை போலிசாரும் தினேஷ் தற்கொலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் தனிப்படை போலீசாரும் விசாரணை நடத்தி அவர்களது வாக்குமூலத்தை பதிவு செய்தனர். ஆனால் தினேஷின் செல்போனை பறிமுதல் செய்யாமல் அதில் நடைபெற்றுள்ள தகவல் பரிமாற்றங்கள் குறித்த விபரங்களை பெறவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு 2022 ஆம் ஆண்டு தனிபடையிடமிருந்து ADSP முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. தற்போது ADSP முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலிசார் வழக்கில் தொடர்புடையதாக கூறி 200க்கும் மேற்பட்டோர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில் டி எஸ் பி அண்ணாதுரை தலைமையிலான சிபிசிஐடி போலீசார் இன்று கோத்தகிரி அருகே உள்ள தினேஷின் வீட்டிற்கு சென்று அவரது தந்தை போஜனிடம் தினேஷ் பயன்படுத்திய செல்போன் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் அவரது தந்தை தினேஷின் செல்போன் குறித்து எதுவும் தெரியாது என்றும் தினேஷ் இறந்து 7 ஆண்டுகள் ஆவதால் எந்த விபரமும் இல்லை என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து சிபிசிஐடி போலீசார் மீண்டும் கோவைக்கு திரும்பி சென்றனர்.