”வெள்ளச்சேரியாக இருந்ததை வேளச்சேரியாக மாற்றிவிட்டோம்” - அமைச்சர் கே.என்.நேரு
எடப்பாடி பழனிசாமி இரவு தூங்கிட்டு காலைல முழிக்கிறதுக்கு முன்னாடி மழைநீர் வடிந்துவிட்டதே என ரொம்ப சங்கடப்பட்டு அறிக்கை கொடுக்கிறாங்கன்னு நினைக்கிறேன் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெள்ளை அறிக்கை கேட்டது குறித்த கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்துள்ளார்.
சென்னை ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் சிறப்பாகச் செயல்பட்டனர். கனமழை அறிவிப்பு வெளியானதும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.அதனால் 17-20 செ.மீ மழை பெய்தாலும், ஒரு சில இடங்களை தவிர அனைத்து இடங்களிலும் மழை நீர் வடிந்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் 1135 கி.மீ கட்ட திட்டமிட்டு, 781 கி.மீ நீளத்திற்கு முடிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. மழைநீர் வடிகால் திமுக ஆட்சியில் தான் சிறப்பாக அமைக்கப்பட்டது, அதிமுக ஆட்சி காலத்தில் மழை நீர் வடிகால் 400 கி.மீ தான் கட்டப்பட்டது. புளியந்தோப்பு பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காணும் திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார் 398 அம்மா உணவகங்களில் இன்று காலை மட்டும் சுமார் 65,000 பேர் இலவசமாக உணவு அருந்தியுள்ளனர்.
வெள்ளச்சேரியாக இருந்ததை வேளச்சேரியாக மாற்றிவிட்டோம். கடந்த முறை பாதிப்பை ஏற்படுத்திய வேளச்சேரி, நாராயணபுரம் ஏரிகளில் இம்முறை பாதிப்பு இல்லை. மழை, வெள்ளத்தின்போது சென்னையில் துணை முதல்வர் உதயநிதியின் கால் படாத இடமே இல்லை. நேற்று ஒரே நாளில் 17 செ.மீ வரை மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்கள் 30 செ.மீ வரை மழை பதிவாகியுள்ளது. மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்ட காரணத்தால்தான் தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது. ஒருசில இடங்களைத் தவிர அனைத்து இடங்களிலும் இயல்பு நிலை திரும்பியுள்ளது. பல்வேறு இடங்களில் மக்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர். சென்னையில் கனமழையால் சுரங்கப் பாதையில் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை. மழைநீர் வடிகால் பணிகள் காரணமாகவே 4 மணிநேரத்தில் நீர் வடிந்தது” என்றார்.