கவரப்பேட்டை ரயில் விபத்து: அனைவரும் பத்திரமாக மீட்பு.. 20 பேருக்கு தொடர் சிகிச்சை..
கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே விரைவு ரயில் - சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
மைசூரில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு இன்று பொன்னேரி வழியாக 8:30 மணிக்கு கடந்து கும்மிடிப்பூண்டி வழியாக பீகார் மாநிலம் தர்பங்கா செல்லும் பாக்மதி விரைவு ரயில் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மூன்றுக்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் பெட்டிகளும், 3 சரக்கு ரயில் பெட்டிகளும் தடம் புரண்டன. சரக்கு ரயில் பெட்டியின் மேலே சிக்கிக் கொண்டு தண்டவாளம் மின்கம்பம் போல் காட்சியளித்தது. அத்துடன் ரயில் தண்டவாளங்களை உடைத்து கொண்டு 2 பெட்டிகளில் தீப்பிடித்து எரிந்தது. இதில் அந்தப் பெட்டிகளில் இருந்த ரயில் பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக அதிலிருந்த பயணிகளை மீட்டு உடனுக்குடன் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரயில் பயணத்தை சிறுவர்கள், குழந்தைகள் ,வயதானவர்கள், பெண்கள் உள்ளிட்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கிருந்த தனியார் திருமண மண்டபங்கள், ரயில் நிலையம், தேவாலயம் உள்ளிட்ட பகுதிகளில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் சிலர் கும்மிடிப்பூண்டியில் இருந்து செல்லும் அரசு பேருந்து மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து காரணமாக படுகாயம் அடைந்து முதலில் அனுப்பி வைக்கப்பட்ட ஏழு பேரில் நான்கு பேர் பொன்னேரி மருத்துவமனையிலும், 20க்கும் மேற்பட்டோர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
விபத்து காரணமாக சேதம் அடைந்த தண்டவாளம் மற்றும் ரயில் பெட்டிகளில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சீரமைக்கும் பணிகளை விரைந்து முடித்து கும்மிடிப்பூண்டி சென்ட்ரல் மார்க்கரில் சேவை துவங்க முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன.