நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன்
தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் நடிகை கஸ்தூரிக்கு எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி கடந்த நவம்பர் 3ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்களை பற்றி அவதூறாக பேசியதாக சர்ச்சை கிளம்பியது. தொடர்ந்து, அவருக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அவருக்கு எதிராக ஏராளமான புகார்கள் காவல் நிலையங்களில் அளிக்கப்பட்டன.எழும்பூர் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது நான்கு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
கஸ்தூரி ஜாமீன் பெற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து, ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு சம்மன் கொடுக்க சென்றபோது வீடு பூட்டியிருந்ததாகவும், அவரது மொபைல் போன் அணைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, நடிகை கஸ்தூரியின் வீட்டு பணியாளர்களிடம் தனித்தனியாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் ஹைதராபாத்திற்கு அருகே இருப்பது தெரியவந்தது. தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் ஹரி கிருஷ்ணன் என்பவர் வீட்டில் நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் கோரி நேற்று முன்தினம் அன்று எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. , கஸ்தூரியின் குழந்தையின் நிலைமையை கருத்தில் கொண்டு சென்னை மாநகர காவல்துறை தரப்பில் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்படாது எனவும் தகவல் வெளியானது. இந்த மனு இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், கஸ்தூரிக்கு எழும்பூர் 14 ஆவது நீதிமன்ற நீதிபதி தயாளன் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார். தினமும் காலை எழும்பூர் காவல் நிலையத்தில் 10 மணியளவில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது மேலும் இரு நபர் உத்தரவாதமும் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது. இந்த ஜாமீன் உத்தரவை நாளை சிறையில் சமர்ப்பித்து நடிகை கஸ்தூரி வெளியில் வருவார் என வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாமீன் கேட்ட மனுவில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் மன்னிப்பு கேட்க வில்லை எனவும் வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது