"அரசியலில் கெளரவத் தோற்றம் போல வருகிறார் விஜய்"- கார்த்தி சிதம்பரம்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் படத்தில் கௌரவத் தோற்றம் என்று வருவார்கள், அதே போல் அவ்வப்போது அரசியலிலும் வந்து செல்கிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
புதுக்கோட்டை ரோஜா இல்லம் என்ற அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், “பெரியார் சர்ச்சை தேவை இல்லாத சர்ச்சை. இந்தியாவில் பேச வேண்டிய பிரச்சனை அதிக அளவில் இருக்கிறது. படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. சாதாரண நடுத்தர குடும்பத்தில் இருப்பவர்களுக்கு அன்றாடம் வாழ்க்கையில் இருக்கும் நிர்வாக சிரமம் போக்குவரத்து சிரமம் இதைப் பற்றி எல்லாம் பேசுவது கிடையாது. இதை விட்டுவிட்டு சரித்திர சித்தாந்தத்துக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் முரண்பாடுகளை தற்போது விவாதிப்பதில் எந்தவித பிரயோஜனமும் கிடையாது. அதனால் இது தேவையற்ற சச்ர்சை. மக்கள் யாரும் பெரியாரைப் பற்றி இப்படி பேசுகிறார்களே திருவள்ளுவருக்கு இந்த உடையை அணிவித்தார்களே... இவர் இவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டாரே? உண்மையா? பொய்யா? என்று கேட்பதில்லை. மக்களைப் பொறுத்தவரை 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணம் வந்து சேரவில்லை, நியாய விலைக் கடையில் மண்ணெண்ணெய் வழங்குவதில்லை. படித்த பையனுக்கு வேலை கிடைக்கவில்லை என்ற பிரச்சனைகளை தான் பேசுகின்றனர். இதைத்தான் அரசியல் மேடையில் நாம் இன்றைக்கு பேச வேண்டிய பிரச்சனைகள். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் படத்தில் கௌரவத் தோற்றம் என்று வருவார்கள் அதே போல் அவ்வப்போது அரசியலிலும் வந்து செல்கிறார்.
பாஜகவை பொறுத்தவரை தமிழ்நாட்டில் குறைகின்ற அரசியல் கட்சியாக தான் நான் பார்க்கின்றேன். பாராளுமன்றத் தேர்தலில் இருந்த ஆதரவு என்று கூட சொல்ல முடியாது, ஆதரவு போல் இருந்த தோற்றத்தில் கூட தற்போதுள்ள நிலைமை குறைவாகத்தான் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை அவர்களை யாரும் விரும்பி கூட்டணியில் சேர்த்துக் கொள்ளப் போவதில்லை. அவர்கள் யாரையாவது வலுக்கட்டாயம் செய்து தான் கூட்டணியில் சேர்கிறார்களே... தவிர பாஜகவோடு தமிழ்நாட்டில் யாரும் விரும்பி கூட்டணி வைக்க மாட்டார்கள். பாஜகவோடு கூட்டணி வைத்தால் கூட்டணி வைக்கக்கூடிய கட்சியின் வாக்கு வங்கியும் குறையும் என்ற உண்மை அனைவருக்கும் தெரியும். வலுக்கட்டாயமாக வேறு ஏதாவது செய்து கூட்டணி வைக்கலாம். அவர்கள் யாருடன் கூட்டணி வைத்தாலும் தமிழ்நாட்டில் அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்பதுதான் என்னுடைய கருத்து” என்று தெரிவித்தார்.