குடும்பங்களை மையமாக வைத்து தான் அரசியல் கட்சிகள் இயங்குகிறது- கார்த்தி சிதம்பரம்
முதலமைச்சரின் அதிகாரத்துக்கு உட்பட்டு தான் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக ஸ்டாலின் அறிவித்துள்ளார், அமைச்சரை உருவாக்குவதோ நீக்குவதோ துறைகளை மாற்றுவதோ என்பது முதலமைச்சரின் நிர்வாக முடிவு இதில் விமர்சனம் செய்வது என்னை பொறுத்தவரையில் சரியல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், “முதலமைச்சரின் அதிகாரத்திற்கு உட்பட்டு உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது முதலமைச்சர் எடுக்கின்ற நிர்வாக முடிவு ,இதில் விமர்சனம் செய்வது என்னை பொறுத்தவரையில் சரியானது அல்ல . ஒரு முதலமைச்சருக்கோ பிரதம மந்திரிக்கோ முழு அதிகாரம் உண்டு, யாரை வேண்டுமானாலும் அவர்கள் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளலாம். மந்திரி சபை மாற்றப்படுவது அதிசயமான நிகழ்வு அல்ல, வாடிக்கையான ஜனநாயக நிகழ்வுதான். இந்திய அளவில் குடும்பங்களை மையமாக வைத்து தான் அரசியல் கட்சிகள் இயங்குகிறது. காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி மாநில கட்சிகள் பலவாக இருந்தாலும் சரி இது புரிவதில்லை. கட்சியில் இருப்பவர்கள் ஒருவரை தலைவராக ஏற்றுக் கொண்டு விட்டால் அதனை கட்சிக்கு வெளியே உள்ளவர்கள் விமர்சனம் செய்வது என்னை பொறுத்தவரையில் உகந்ததாக இருக்காது.
செந்தில் பாலாஜியின் வழக்குக்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஆனால் அவரை 471 நாட்கள் சிறையில் வைத்திருந்தது தவறு, அமலாக்கத் துறையினர் ஆதாரம் இருந்தால் உடனடியாக வழக்கை நடத்தி தீர்ப்பு பெற்று கொடுத்திருக்க வேண்டும். வழக்கு தொடங்குவதற்கு முன்பே அவரை கைது செய்தது தவறு கண்டிக்கத்தக்கது. விசாரணைக்கு முன்பே கைது என்பதை தவிர்க்க வேண்டும், படிப்படியாக உச்சநீதிமன்றம் இது போன்ற வழக்குகளில் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க வேண்டும். செந்தில் பாலாஜி அமைச்சராக பதவி ஏற்பது எந்த விதமான தடையும் கிடையாது, தண்டனை பெற்றால் மட்டுமே அமைச்சர் பதவியை ஏற்க முடியாது. அப்படி வழக்கு போட்டவர்கள் எல்லாம் அமைச்சராக முடியாது என்றால் பாஜக நினைத்தால் எல்லோர் மீதும் வழக்கு போட்டு யாரையுமே அமைச்சராக பதவி ஏற்க விடாமல் செய்துவிடும்.
நாங்கள் கூட்டணி என்ற முறையில் காங்கிரஸ் திமுகவோட தோலோடு தான் தோல் நிற்க்கின்றோம். தேர்தல் பத்திர முறைகேடு சம்பவத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் தீவிர விசாரணை நடத்த வேண்டும், தேர்தல் பத்திரம் பணத்திற்காக அமலாக்கத்துறை மூலம் மிரட்டி எவ்வளவு பணம் பெற்றார்கள் என்பதை விசாரித்து வெளி உலகத்திற்கு கொண்டுவர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.