பாஜகவுடன் உறவு வைப்பவர்கள் நாசமாக போய்விடுவார்கள்- கார்த்தி சிதம்பரம்
பாஜகவுடன் யார் உறவு வைத்திருந்தாலும் அவர்கள் நாசமாக போய்விடுவார்கள் என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அருணாவை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், “திருமாவளவன் ஒட்டுமொத்த அரசாங்கத்தை குறிப்பிடுகிறாரா.? சமுதாயத்தை குறிப்பிடுகிறாரா என்று பார்க்க வேண்டும், அவர் சமுதாயத்தைத்தான் குறிப்பிடுகிறார், அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். பல மாநிலங்களில் தலித் தலைமையை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டுகிறார்கள், அதை நான் கண்கூடாக பார்த்து உள்ளேன். அனுபவ ரீதியாகவும் அறிந்துள்ளேன், பல மாநிலங்களில் தலித்தை முதலமைச்சர் என்று அறிவித்தால் சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு இன்னும் முன்னேற்றம் வரவில்லை என்று அவர் சொல்லும் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் கக்கனுக்கு பிறகு தலித் ஒருவர் முக்கியமான அமைச்சர் பொறுப்புக்கு வர முடியவில்லை என்பதை ஆட்சி செய்பவர்களிடம் தான் கேட்க வேண்டும். சமுதாய ரீதியில் ஒரு தலித்தை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு பல மாநிலங்களில் இன்னும் சூழல் வரவில்லை என்ற திருமாவின் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். தமிழ்நாட்டிலும் இன்னும் அந்த சூழல் வரவில்லை என்று அவர் சொல்லும் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
சவுக்கு சங்கர் சர்ச்சையான கருத்துக்களை கொச்சையான கருத்துக்களை சொல்லக்கூடியவர். அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமெனில் அதற்கு பொருந்திய சட்டங்கள் உண்டு. சவுக்கு சங்கர் என்னை கூட விமர்சனம் செய்துள்ளார், அவர் விமர்சனம் பண்ணாத ஆளே கிடையாது. அதிமுகவில் உள்ள அடிமட்ட தொண்டனுக்கு புரிந்த கருத்தை தற்பொழுது அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். பாஜகவுடன் யார் உறவு வைத்திருந்தாலும் அவர்கள் நாசமாக போய்விடுவார்கள்” என்றார்