திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா - பலத்த போலீஸ் பாதுகாப்பு!!

 
thiruvannamalai

திருவண்ணாமலை மலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.

சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக பார்க்கப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று மகாதீபம் ஏற்றப்படுகிறது. இத்தலத்தின் மூலவர் அருணாச்சலேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை உண்ணாமலை அம்மாள் என்ற பெயரிலும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். கடந்த 10ஆம் தேதி கார்த்திகை மாத தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், இன்று அண்ணாமலையார் கோவில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.

ttn

கொரோனா நோய் பரவல் காரணமாக மாடவீதியில் நடைபெறவேண்டிய உற்சவங்கள் கோயிலிலுள்ள ஐந்து பிரகாரத்தில் நடைபெற்றது. விநாயகர், முருகர், அண்ணாமலையார்,பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் என சுவாமிகள் தனித்தனி தேர்களில் கடந்த 16ஆம் தேதி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

deepam

இந்நிலையில்  அருணாச்சலேஸ்வரர் கருவறையில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது . கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் பக்தர்கள் இன்றி  பரணி தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தின் முக்கிய நிகழ்வான மகாதீபம் இன்று மாலை 6 மணிக்கு ஏற்றப்படுகிறது .  இதன் காரணமாக தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு 3500 லிட்டர் நெய், ஆயிரம் மீட்டர் காடா துணிகள் மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. முன்னதாக கிரிவலம் செல்வதற்கு மட்டும்  இன்றும், நாளையும் தலா 20 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இதனால் திருவண்ணாமலையில்  போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.