கிருஷ்ணகிரியில் 13 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது- கனிமொழி

 
கனிமொழி

கிருஷ்ணகிரியில் 13 வயது பள்ளி மாணவி சிவராமன் என்ற ஆசிரியரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெற்ற என்.சி.சி பயிற்சி முகாமில் கலந்து கொண்ட 12 வயதான 8ம் வகுப்பு பயிலும் சிறுமியை அதிகாலை மூன்று மணியளவில் பயிற்சியாளரே பாலியல் வன்கொடுமை செய்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அந்த மாணவி இது குறித்து பள்ளியின் ஆசிரியர்கள், முதல்வரிடம் கூறிய போது, இதை பெரிது படுத்த வேண்டாம் எனக்கூறியதாக தெரிகிறது. இந்நிலையில், அந்த மாணவிக்கு உடல்நிலைக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் இருக்கும் வேளையில், புகார் அளிக்கப்பட்டு 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள கனிமொழி எம்பி, “கிருஷ்ணகிரியில் 13 வயது பள்ளி மாணவி சிவராமன் என்ற ஆசிரியரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பள்ளியின் தலைமையாசிரியர் உட்பட 5க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், இனியும் இம்மாதிரியான மனிதத்தன்மையற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் உறுதியேற்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.