கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு- புதிதாக 3 வழக்குகள் பதிவு

கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கடந்த ஜூன் மாதம் விஷ சாராயம் குடித்து பலர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ 3 வழக்கு பதிவு செய்துள்ளது.
கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விவகாரம் தொடர்பாக 66 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சிபிசிஐடி போலீசார் அனைத்து கோணங்களிலும் விசாரணையை நகர்த்தி இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 11 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
இந்நிலையில் அதிமுக, பாஜக மற்றும் பாமக சார்பில் விஷ சாராய வழக்கை சிபிசிஐடிக்கு பதிலாக சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சென்னை ஐகோர்ட்டு முடிவில் தலையிட விரும்பவில்லை என கூறி தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும் கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை என்றும், சிபிஐ விசாரணையை நடத்தலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து சிபிசிஐடி வடக்கு மண்டலம் தரப்பில் போடப்பட்ட 3 வழக்கை அடிப்படையாக வைத்து சிபிஐ மீண்டும் 3 வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராமர்,ஜோசப் ராஜ், சின்னதுரை, ரவி,தாமோதரன்,விஜயா ஆகியோர் மீதும் சிபிஐ நான்கு பிரிவிலும் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் கள்ளக்குறிச்சியில் சிபிஐ விசாரணையை துவக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.