முட்டுக்காட்டில் அமையவுள்ள கலைஞர் பன்னாட்டு அரங்கத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் முட்டுக்காடு பகுதியில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் 525 கோடி செலவில் கலைஞர் பன்னாட்டு அரங்க கட்டுமான பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்துள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா இலச்சினை வெளியீட்டு விழாவில்பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,‘‘ சென்னை நந்தம்பாக்கத்தில் வர்த்தக மையம் அமைந்திருந்தாலும், வளர்ந்து வரும் தேவைக்கும், எதிர்காலத் தேவைக்கும் போதுமானதாக இல்லை. எனவே, இதனைக் கருத்தில் கொண்டு ‘கலைஞர் Convention Centre’ சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் 5 ஆயிரம் பேர் அமரக்கூடிய - உலகத்தரத்திலான மாநாட்டு அரங்கம், மிக பிரம்மாண்டமாக உலகத் தரத்தில் சென்னையில் அமைக்கப்படும்’’ என்று அறிவித்தார்.
இதன்படி, 2024 - 2025ஆம் நிதியாண்டுக்கான அரசின் நிதிநிலை அறிக்கையில் “சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் முட்டுக்காடு பகுதியில் சுமார் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் சர்வதேச கண்காட்சிகள் பன்னாட்டுக் கூட்டங்கள் நடத்திடும் வகையில், உலகத்தரம் வாய்ந்த கலைஞர் பன்னாட்டு அரங்கம் (Kalaignar Convention Centre) நவீன வசதிகளுடன் கட்டப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். இதன்படி, இந்த அரங்க கட்டுமான பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி பொதுப்பணித்துறை விண்ணப்பித்து இருந்தது.
இதை பரிசீலனை செய்து சுற்றுச்சூழல் அனுமதி அளித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணைய அனுமதி கிடைத்தவுடன் இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5 ஆயிரம் இருக்கைகள் கொண்ட மாநாட்டுக் கூடம் 102 கோடியிலும், 10 ஆயிரம் நபர்கள் பார்வையிடும் வசதிகொண்ட கண்காட்சி அரங்கம் 172 கோடியிலும், கூட்ட அரங்குகள், அரங்கம் ஆகிய வசதிகள் 108 கோடியிலும் அமையவுள்ளது. மேலும், திறந்தவெளி அரங்கம், உணவு விடுதிகள், 10 ஆயிரம் வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு வாகன நிறுத்த வசதிகள் மேற்கொள்ளபடவுள்ளது. மொத்தம் 525 கோடி மதிப்பீட்டில் சுமார் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு இந்த கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. 2025 இறுதி அல்லது 2026 தொடக்கத்தில் இந்த கட்டுமான பணிகளை முடிக்க பொதுப்பபணித்துறை திட்டமிட்டுள்ளது.