இந்தியா முழுவதும் அரசியலை கேலிக் கூத்தாக்கும் கட்சி பாஜக - கடம்பூர் ராஜூ கடும் விமர்சனம்..!
அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைந்த பின்னர், அரசியல் சூழ்நிலை காரணமாக அனைத்து அதிமுகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களும் புதிய ஆட்சி அமையும் வரை ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என கூவத்தூரில் தங்கியிருந்தோம். நாங்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கொடுத்தோம். நாங்கள் யார் காலிலும் விழுந்து பதவி வாங்க வேண்டிய அவசியமில்லை. ஜெயலலிதா மறைந்த பின்னர் அவரது நிழலாக இருந்த சசிகலா எங்களுக்கு ஆதரவாக வந்து தங்கியிருந்தார். அவரிடம் ஆசி வாங்கினோம். நாங்கள் யாரையும் விலைக்கு வாங்கவில்லை. ஆனால், விலைக்கு வாங்கி பேரம் பேசுவதெல்லாம் பாஜக ஆட்சியை பிடித்த மாநிலங்களில் தான் நடந்துள்ளதே தவிர அப்படிப்பட்ட நிகழ்வு இங்கு நடக்கவில்லை.
தற்போதுகூட பாஜக கர்நாடகா மாநிலத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா முழுவதும் அரசியலை கேலிக் கூத்தாக்கும் கட்சி பாஜக. அதிமுக ஆட்சியில் திருக்கோயில் நிதியில் அனைத்து ஆலயங்களிலும் அன்னதான திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் 5 ஆயிரம் ஜோடிகளுக்கு அறநிலையத்துறை மூலம் திருமணம் செய்து வைத்தார். அதிமுக ஆட்சியில் 5 ஆயிரம் கோயில்களுக்கும் மேலாக குடமுழுக்கு நடந்துள்ளது. இதனை உதயநிதி அறிந்திருக்க மாட்டார். அவர்கள் இரட்டை வேடம் போடுகின்றனர்.
இன்றைக்கு பழநியில் முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்தியுள்ளனர். இதே முருகனுக்கு தமிழ், ஆங்கிலம் தெரியுமா? சேது சமுத்திரம் திட்டம் வந்தபோது ராமர் என்ன பொறியாளரா என விமர்ச்சித்தவர்கள் இவர்கள். இரட்டை நிலைப்பாடு என்பது திமுகவுக்கு பொருந்தும். அறிநிலையத்துறையை அறமாக வளர்த்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இப்போது பழநியில் நடந்திருப்பது இவர்களின் சுய விளம்பரத்துக்காக நடத்தப்பட்ட மாநாடு. கடவுளையே ஏமாற்றும் மாநாடு. இதுவரை திமுக ஆட்சியில் மக்களைத்தான் ஏமாற்றி வந்தனர். இப்போது கடவுளையும் ஏமாற்ற முற்பட்டுள்ளனர். அதற்காக இந்த ஆட்சிக்கு கடவுளின் தண்டனை நிச்சயம் கிடைக்கும்” என்று கடம்பூர் ராஜூ கூறினார்.
முன்னதாக, கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் ஊராட்சி காமராஜர் நகர் இ.பி. காலனியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5.40 லட்சத்தில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை, இனாம் ஊராட்சி ஊராட்சி லட்சுமிபுரம் மேலக்காலனியில் ரூ.5.66 லட்சத்தில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை ஆகியவற்றின் திறப்பு விழா இன்று நடந்தது. தொகுதி எம்எல்ஏ-வான முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தலைமை வகித்து, பேவர் பிளாக் சாலைகளை திறந்து வைத்து பார்வையிட்டார். இதில், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சத்யா, நகர்மன்ற உறுப்பினர் கவியரசன், அதிமுக மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சங்கர் கணேஷ், வார்டு உறுப்பினர் ரேவதி, அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.