மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை பொன்முடி புறக்கணிப்பு- கே.பாலகிருஷ்ணன் வரவேற்பு

 
K balakrishnan

மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் புறக்கணிப்பு செய்ய முடிவெடுத்திருப்பது வரவேற்புகுரியது என சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

K Balakrishnan - கே.பாலகிருஷ்ணன்

இதுதொடர்பாக கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்புகளில் கையெழுத்திட ஆளுநர் ஆர்.என்.ரவி அடாவடியாக மறுத்துள்ளார். இந்தப் போக்கினை கண்டித்து, பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதில்லை என உயர்கல்வித் துறை அமைச்சர் எடுத்துள்ள முடிவினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வரவேற்கிறது.

முதுபெரும் விடுதலைப் போராட்ட வீரரும், நூற்றாண்டினைக் கடந்த மக்கள் தலைவருமான தோழர் என்.சங்கரய்யா, நாட்டுக்காக பட்டப்படிப்பை துறந்தவர். அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இப்பரிந்துரையை ஏற்று மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் செனட் மற்றும் சிண்டிகேட் தீர்மானம் நிறைவேற்றி கௌரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்தது. இந்த முடிவினை ஏற்க மறுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி அந்த கோப்பில் கையெழுத்திட மறுத்தார்.

கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவது பல்கலைக்கழகத்தின் முடிவு என்பதை பலமுறை வலியுறுத்தியும் அதனை ஏற்காத ஆளுநருக்கு தமிழ்நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலை கழகத்தின் தீர்மானம் மீண்டும் ஒருமுறை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், அதில் கையெழுத்திடுவதை மீண்டும் அடாவடியாக மறுத்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

rn ravi

அரசமைப்புச் சட்டத்தின் படி செயல்பட வேண்டிய ஆளுநர், ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை மட்டுமே தனது முழு மூச்சாக முன்னெடுத்து வருவதுதான் இந்த மோசமான நிலைக்கு காரணமாகும். என்.சங்கரய்யாவின் தியாகத்தை ஆளுநர் அறிந்திருக்கவில்லை என ஆர்.எஸ்.எஸ் சார்பு ஊடகங்கள் சமாளிப்பாக எழுதிவந்தன. ஆனால், வேண்டுமென்றே இந்த அராஜகத்தில் அவர் ஈடுபட்டு வருவது வெளிப்படையாக தெரிகிறது.

இந்திய கூட்டாட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மீறிய அதிகாரம் எந்தவொரு தனி நபருக்கும் கிடையாது. எனவே பட்டமளிப்பு விழாவினை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளது, அரசின் கடுமையான கண்டனச் செய்தியை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு இந்த முடிவினை வரவேற்கிறது.

கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்:

தமிழ்நாடு அரசின் முடிவுகளுக்கு முட்டுக்கட்டை போட்டுவரும் ஆளுநர், மதுரை காமராசர் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கச் செல்வது அவமானகரமான ஒன்றாகும். எனவே அவருக்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தோழர்கள் கருப்புக் கொடியேந்தி கண்டனம் முழங்குவார்கள். தமிழ்நாட்டு மக்கள் இந்த போராட்டத்திற்கு பேராதரவு வழங்கிட வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.