முன்னெச்சரிக்கை என்ற பெயரில் தொட்டதற்கெல்லாம் கைதா?- கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
தொட்டதற்கெல்லாம் முன்னெச்சரிக்கை கைது என காவல்துறை நடந்துகொள்வது சரியானதல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயக அமைப்பில் பிரச்சாரங்கள், போராட்டங்கள் எல்லாம் அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமைகள். ஆனால் தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், தெருமுனை கூட்டம் என எல்லாவற்றிற்கும் அனுமதி தருவதில் காவல்துறை இழுத்தடிக்கிறது. மேலும், தொட்டதற்கெல்லாம் முன்னெச்சரிக்கை கைது என காவல்துறை நடந்துகொள்வது சரியானதல்ல.
உதாரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டம் பெரிய தள்ளப்பாடி என்ற சிறு கிராமத்தில், பட்டா கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய தோழர்களை கூட கைது செய்துள்ளனர். காவல்துறையின் இந்த மோசமான போக்கு தமிழ்நாடு அரசின் நற்பெயரைத்தான் சீர்குலைக்கும், எனவே போக்கை மாற்றிக்கொண்டு காவல்துறை சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டுமென வற்புத்துகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.